இடைத்தேர்தலுக்கு தடையா...? சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் தரப்பு அதிரடி பதில் மனு...!
Is there ban by elections Vijay side files response petition Chennai High Court
ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தரப்பில் புதிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள தொகுதிகளில் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், உறுப்பினர்கள் இல்லாததால் தொகுதி மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் கரூர் தொகுதி உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி உறுப்பினர் ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனால் காலியாகியுள்ள ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் சூழல் உருவானது. ஆனால், சம்பந்தப்பட்ட தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தேர்தல் வழக்குகள் முடிவடைவதற்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமை ஏற்படுவதுடன், ஒரே தொகுதியில் மக்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக அரசியலமைப்பு சார்ந்த சிக்கலும் உருவாக வாய்ப்புள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்மைச்சர் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.இந்த நிலையில், வழக்கில் முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், தற்போது இந்த தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகளை சட்டப்பேரவையில் எடுத்துரைக்க உரிய பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடைத்தேர்தல் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கத்திலேயே வெங்கடாஜலபதி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாகவும், எனவே அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Is there ban by elections Vijay side files response petition Chennai High Court