110 மாவட்டங்கள், புதிய நிர்வாக கட்டமைப்பு...! திமுகவில் தொடங்கியது அடுத்தகட்ட அதிரடி! - மு.க.ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


திமுகவின் அமைப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்களை 110 ஆக உயர்த்தி, புதிய நிர்வாகப் பிரிவுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டக் கழகம் என்ற அடிப்படையில் புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. சில மாவட்டக் கழகங்கள் மட்டும் மூன்று தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"கடந்த 22-ந் தேதி நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை சீரமைப்பதற்கான முக்கிய முடிவுகள் பல்வேறு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் இதுவரை 15 முறை அமைப்புத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதன் அடுத்தகட்டமாக 16-வது அமைப்புத் தேர்தலை நடத்துவதுடன், கட்சியின் நிர்வாக அமைப்பில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை மாற்றியமைப்பது முக்கிய முடிவாக அமைந்தது.

அதன்படி, தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்களை 110 ஆக அதிகரித்து, எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டக் கழகங்களின் கீழ் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுக்கும் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கழக மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளையும், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளையும் அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் 110 மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மக்கள் தொகை அதிகமாக உள்ள காரணத்தால் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி மட்டும் தனி மாவட்டக் கழகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள 110 மாவட்டக் கழகங்களிலும், தற்போது பொறுப்பில் உள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமைக் கழகம் சார்பில் நியமிக்கப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில், புதிதாக வரையறுக்கப்பட்ட மாவட்டக் கழகங்களின் கீழ் ஒன்றிய, பகுதி, பேரூர் மற்றும் வட்டக் கிளை அமைப்புகளை எவ்வாறு பிரிப்பது என்பது தொடர்பான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் தலைமைக் கழகத்துக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், கழக மறுசீரமைப்புக் குழு வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் புதிய நிர்வாக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

110 districts new administrative structure next phase action begun DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->