எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டுமா...? வேண்டாமா...? - சட்டசபையில் மீண்டும் அனல் பறந்த விவாதம்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவது தொடர்பான விவாதம் மீண்டும் சூடுபிடித்தது. மக்கள் நலப் பணிகளுக்காக அரசு வாகனம் வழங்கப்படுகிறதா அல்லது தேவையற்ற செலவா என்ற கேள்வியை மையமாகக் கொண்டு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.விவாதத்தை தொடங்கி வைத்த தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாத நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவதால் என்ன பயன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, கள ஆய்வுகளை மேற்கொண்டு பணியாற்றுவதற்காகவே அரசு வாகனம் வழங்கப்படுகிறது என விளக்கம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து அவை முன்னவர் செங்கோட்டையன் பேசுகையில், அரசு சார்பில் வழங்கப்படும் வாகனத்தில் செல்லும்போது அதற்கென தனி மரியாதை கிடைக்கும் என்றார். மேலும், தி.மு.க. ஆட்சியில் கார் பந்தயத்திற்காக ரூ.24 கோடி செலவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு, அந்த பணம் யாருடைய வீட்டு பணம்? என கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலடி கொடுத்த தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என்.நேரு, செங்கோட்டையன் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் ரூ.10 கோடி நிதியை பயன்படுத்தாமல் வைத்திருந்ததாகக் கூறினார்.

நீங்கள் செய்ததைப் போல நாங்களும் நிதியை பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமா? என அவர் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அரசு வாகனம் உண்மையில் தேவைப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவின்படி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் தேவையில்லை என தெரிவித்தார்.இதையடுத்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், தி.மு.க. உறுப்பினர்கள் தங்களிடம் சொந்த வாகனம் இருப்பதால் அரசு கார் தேவையில்லை என தெரிவித்துள்ளனர். எனவே, சொந்த வாகனம் இல்லாத எம்.எல்.ஏ.க்கள் அரசு வாகனத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், சொந்த கார் வைத்திருப்பவர்கள் அதிலேயே சென்று தொகுதி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே அமைச்சர் அருண்ராஜ், அரசு நிதிநிலை குறித்து தி.மு.க. உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதாகக் கூறினார். அரசு கஜானாவில் பணம் இல்லாததால் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்க வேண்டாம் என கூறும் நிலையில், கடந்த ஆட்சியில் கலைஞர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என முன்வந்தபோது மட்டும் நிதி இருந்ததா? என அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு தி.மு.க. கொறடா எ.வ.வேலு பதிலளிக்கையில், கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்ததாக தெரிவித்தார்.

ஆனால், தற்போதைய சூழலில் அந்த திட்டம் தேவையா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்ததாகவும், தமிழ்நாட்டின் பொருளாதார நிலை சீரடைந்த பின்னர் அதனை மேற்கொள்ளலாம் என்றும், தற்போதைக்கு வேண்டாம் என முடிவு செய்ததாகவும் விளக்கம் அளித்தார்.இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வழங்குவது தொடர்பான விவகாரம் சட்டசபையில் மீண்டும் விவாதப் புயலை கிளப்பியது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அடுத்தடுத்த கேள்விகள் மற்றும் பதில்களால் அவையில் சிறிது நேரம் அனல் பறந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do MLAs need government car Dont you Heated debate again Assembly


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->