"சமத்துவ இடுகாடு அமைத்தால் ரூ.10 லட்சம் பரிசு!": சட்டமன்றத்தில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய அமைச்சர் வன்னி அரசு!
TN Minister Vanni Arasu Announces 10 Lakh Reward for Samathuva Idugadu Panchayats Recalls Past Struggles in Assembly Speech
சட்டப்பேரவையில் நடைபெற்ற சமூகநீதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் வன்னி அரசு, "இன்று அவையில் நான் ஆற்றுவது கன்னி உரையல்ல, வன்னி உரை" எனத் தன் உரையைத் தொடங்கினார்.
கடந்த கால நினைவுகள்: கடந்த 2007-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காகத் திருமாவளவனையும் வன்னி அரசுவையும் கைது செய்ய வேண்டுமென முழக்கமிடப்பட்ட அதே சட்டமன்றத்தில், இன்று தன்னைக் கௌரவப்படுத்தி அமைச்சராக அமர வைத்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன் என உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி: தேர்தல் பிரச்சாரத்தின் போது "எனது வெற்றியை விட வன்னி அரசுவின் வெற்றியே முக்கியமானது" எனத் தனக்காகத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
கொள்கை முழக்கமும் உரிமைகளும்
தீக்கிரையாக்கப்பட்ட ஏழைக் குடிசைகளின் சாம்பலில் இருந்து வந்தவன் தான் என்றும், பதவியோ பரிசோ தங்களின் முதன்மை லட்சியமல்ல என்றும் சுட்டிக்காட்டினார். கட்சித் தலைவர் திருமாவளவன் அழைத்தால் நாளையே இப் பதவியைத் துறந்து போராட்டக் களத்திற்குச் செல்லத் தயார் என்றும் அவர் முழங்கினார். மேலும், பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தவரை நிறுத்தக் கூடாது எனக் கூறுவோருக்குப் பதிலளிக்கும் வகையில், சட்டப்படி அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடப் பட்டியலினத்தவருக்கு முழு உரிமையுள்ளது எனத் தெளிவுபடுத்தினார்.
முக்கிய அறிவிப்புகளும் சிறப்புத் திட்டங்களும்
சமூகநீதியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய திட்டங்களை அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் அறிவித்தார்:
ரூ.10 லட்சம் பரிசு: சாதிப் பாகுபாடின்றிச் 'சமத்துவ இடுகாடு' அமைத்துப் பராமரித்து வரும் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்.
மேலவளவு கிராமத்திற்குச் சிறப்பு கவனம்: சாதியப் பிரச்சினைகள் அதிகம் நடைபெறும் கிராமங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், இந்த ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள மேலவளவு கிராமத்திற்குச் சிறப்பு கவனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஏகனாபுரத்திற்குச் சமூக நலக்கூடம்: ஏகனாபுரம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அக் கிராமத்திற்குப் புதிய சமூக நலக்கூடம் கட்டித் தரப்படும் என்றும் அமைச்சர் வன்னி அரசு உறுதியளித்துள்ளார்.
English Summary
TN Minister Vanni Arasu Announces 10 Lakh Reward for Samathuva Idugadu Panchayats Recalls Past Struggles in Assembly Speech