தமிழர்களை மீட்க தீவிரம்... நேபாள பேரிடர் தொடர்பாக டெல்லியில் அவசர ஆலோசனை...!
Urgent meeting in Delhi regarding Nepal disaster
நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்துக்கு சென்ற 85 பேர் குறித்த தகவல் இதுவரை கிடைக்காததால், அவர்களது குடும்பத்தினர் கவலையிலும், கண்ணீரிலும் தவித்து வருகின்றனர்.
மாயமான தமிழர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என அவர்களது உறவினர்கள் தமிழக அரசிடம் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நேபாள பேரிடரில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு நடைபெற்று வரும் பணிகள், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அழைப்புகள், சேகரிக்கப்படும் தகவல்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தனர்.
மேலும், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி, அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் நிலவரம் மற்றும் அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் மட்டுமே நேபாளத்துக்கு சென்றிருப்பார்கள் என முதலில் கருதப்பட்டது.
ஆனால், தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த 100-க்கும் அதிகமானோர் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது என்றார்.இதுவரை 26 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பு கொள்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சிலரைப் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், அவர்களை விரைவில் பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
நேபாள பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என்றும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
English Summary
Urgent meeting in Delhi regarding Nepal disaster