தேமுதிக கூட்டணி இழுபறி..பிடிகொடுத்துப் பேசாத பிரேமலதா? அதிமுக- திமுகவே ஷாக் ஆயிடுச்சாம்?
Is it Premala who doesnot speak up The DMDK alliance is in tatters AIADMK DMK will be shocked
2006 ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது சுமார் 10 சதவீத வாக்கு வங்கியை பெற்ற தேமுதிக, தற்போதைய அரசியல் சூழலில் இரண்டு சதவீதத்திற்கும் கீழாக சரிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்த நிலையில், விஜயகாந்த் பெயருக்காக மட்டுமே அதிமுக அல்லது திமுக தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கலாம் என யோசிக்கும் சூழல் இருந்தாலும், இதுவரை பிரேமலதா விஜயகாந்த் தெளிவான முடிவை அறிவிக்காமல் இருப்பது இரு தரப்புகளுக்கும் சலிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பெரும்பாலான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. ஆனால் தேமுதிக மட்டும் திமுகவா, அதிமுகவா என்ற முடிவை எடுக்காமல், இரு தரப்புடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருகாலத்தில் 10.5 சதவீதம் வரை வாக்குகளை பெற்றிருந்த தேமுதிக, தொடர்ந்து ஏற்பட்ட தேர்தல் தோல்விகள், நிர்வாகிகள் விலகல், அமைப்பு பலவீனம் ஆகிய காரணங்களால் இன்று வாக்கு வங்கி கடுமையாக சரிந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருந்தும், ஆரம்ப கட்டத்தில் தேமுதிக 30 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை சீட், மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.10 கோடி தேர்தல் செலவு என்ற அளவுக்கு கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின. இது திமுக, அதிமுக இரு தரப்பையும் அதிர்ச்சியடைய வைத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தேமுதிக தனது கோரிக்கைகளை படிப்படியாக குறைத்து, தற்போது இரட்டை இலக்கத்தில் 10 தொகுதிகள் என்ற அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல். திமுக தரப்பில் 6 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்க தயாராக இருப்பதாகவும், அதிமுக தரப்பில் 8 தொகுதிகள் வழங்கலாம், மாநிலங்களவை சீட் குறித்து பின்னர் பேசலாம் என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த ஆஃபர்களையும் ஏற்காமல், பிரேமலதா விஜயகாந்த் இன்னும் பிடி கொடுக்காமல் இருப்பது குழப்பத்தை அதிகரித்துள்ளது.
கடலூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில், “தேமுதிக சேரும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி” என்று பிரேமலதா கூறியிருந்தாலும், எந்தக் கூட்டணி என்பதைக் குறிப்பிடாமல் இருந்தது தொண்டர்களிடையே எதிர்பார்ப்பையும் குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது. இதற்கிடையே, மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்திற்கு முன்பாக, பாஜக தரப்புடன் நடந்ததாக கூறப்படும் பேச்சுவார்த்தையில், மத்திய அமைச்சர் பதவி தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டதால், அந்த உரையாடல் முடிவுக்கு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில், தேமுதிக தனது கோரிக்கைகளில் மேலும் இறங்கினால் மட்டுமே திமுக அல்லது அதிமுக தரப்பில் கூட்டணி கதவுகள் திறக்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. இல்லையெனில், தேர்தல் நெருங்கும் தருணத்தில் தேமுதிக கடைசி நேரத்தில் கழற்றி விடப்படும் சூழலும் உருவாகலாம் அல்லது தனித்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். தேமுதிக எடுக்கும் இறுதி முடிவு, தமிழக அரசியல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அடுத்த சில வாரங்களில் தெளிவாகும்.
English Summary
Is it Premala who doesnot speak up The DMDK alliance is in tatters AIADMK DMK will be shocked