தவெகவில் இணையும் சிவி சண்முகம்? மாநிலப் பொறுப்பு கோரிக்கையால் முடிவு தாமதம்! விஜய் மாஸ்டர் பிளான்! அதிருப்தியில் நிர்வாகிகள்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய ஆர்வம் காட்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை கட்சியில் இணைப்பதற்கு தவெக தலைமை கொள்கை ரீதியாக சம்மதம் தெரிவித்திருந்தாலும், மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையால் இறுதி முடிவு தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, அதிமுகவைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் இணைப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனால் அதிமுகவில் இருந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் தவெகவை நோக்கிச் செல்லக்கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அதிமுகவின் 90 சதவீத நிர்வாகிகளும் தொண்டர்களும் தவெகவில் இணைய வேண்டும்" என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்திருந்தார். மாநிலம் முழுவதும், குறிப்பாக வட மாவட்டங்களில் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தவெக தலைமை தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் சி.வி. சண்முகத்துடன் தவெக தரப்பு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அவர், "நான் இன்னும் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்" என்று கூறியிருந்தது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விளக்கங்களுக்கு வழிவகுத்தது.

தவெக ஆட்சி அமைந்த பிறகும் ஆரம்பத்தில் அதிமுகவிலேயே தொடரும் மனநிலையிலிருந்த சி.வி. சண்முகம், கட்சியில் அதிருப்தி அடைந்த நிர்வாகிகளுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படாததைத் தொடர்ந்து தனது அரசியல் எதிர்காலம் குறித்து புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தவெகவில் இணைய அவரது தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி.வி. சண்முகம் மட்டுமின்றி, சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ராகேஷ், திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ. ஹரி, புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. அருண்மொழித் தேவன் உள்ளிட்டோரும் தவெக பக்கம் சாயத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எனினும், சி.வி. சண்முகம் மாநில அளவிலான முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது இணைப்பு குறித்து தவெக தலைமை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இடைத்தேர்தல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள், ஆளுநரிடம் அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் அளித்துள்ள "குதிரைப் பேரம்" குறித்த புகார்கள் போன்ற அரசியல் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் அவசர முடிவு எடுக்காமல் நிதானமாக செயல்பட தவெக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.

அரசியல் வட்டாரங்களின் தகவல்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த இணைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சி.வி. சண்முகம் தவெகவில் இணைந்தால், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கலாம் என்றும், அதிமுகவின் அமைப்பு கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is CV Shanmugam joining TVK Decision delayed over demand for a state level role Vijay master plan Office bearers dissatisfied


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->