‘வீ தி லீடர்’ இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் அண்ணாமலை? “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை!
Is Annamalai transforming the We the Leader movement into a political party Annamalai adopts the Kazhagam style
பாஜகவில் இருந்து விலகி புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தனது ‘வீ தி லீடர்’ (We The Leader) இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தேசிய கட்சிகளின் வழக்கமான அமைப்பு முறையை பின்பற்றாமல், தமிழக அரசியலில் நீண்ட காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ‘கழக’ பாணியிலான கட்டமைப்பை உருவாக்க அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவராக இருந்த காலத்திலேயே, தேசிய கட்சிகளின் செயல்பாட்டு முறை தமிழக மக்களின் அரசியல் மனநிலையுடன் முழுமையாக ஒத்துப்போவதில்லை என்று அண்ணாமலை பல்வேறு மேடைகளில் கருத்து தெரிவித்திருந்தார். கட்சி நிர்வாக கட்டமைப்பில் அடிமட்டத் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான நேரடி தொடர்பு குறைவாக இருப்பதாகவும் அவர் கருதியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது உருவாகி வரும் அவரது புதிய அரசியல் இயக்கத்தில் வார்டு முதல் மாநில அளவு வரை வலுவான அமைப்பு கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளில் காணப்படுவது போல, வார்டு, கிளை, பகுதி, ஒன்றியம், நகரம், மாவட்டம் மற்றும் மாநிலம் என பல அடுக்குகளில் நிர்வாகிகளை நியமித்து கட்சியை விரிவுபடுத்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ‘வீ தி லீடர்’ அமைப்பின் மூலம் உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் அதை முழுமையான அரசியல் கட்சியாக மாற்ற அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அமைப்பு முறையை வடிவமைப்பதற்காக, கடந்த காலங்களில் திராவிட கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அனுபவம் வாய்ந்த சில முன்னாள் நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அடிமட்ட அமைப்புகளை எவ்வாறு கட்டமைத்து வளர்ந்தன, அவை தேர்தல் வெற்றிக்கு எவ்வாறு உதவின என்பதைக் குறித்து அவர் விரிவாக ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், தனது புதிய கட்சியில் பழைய அரசியல் கட்சிகளில் காணப்படும் சில குறைகள் இடம்பெறக்கூடாது என்பதிலும் அண்ணாமலை கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ஆண்டுகளாக ஒரே நபர் முக்கிய பதவிகளில் நீடிக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக, ஒரு நிர்வாகி எத்தனை ஆண்டுகள் ஒரு பதவியில் தொடரலாம், ஒரே நபர் எத்தனை முறை தேர்தலில் போட்டியிடலாம், பதவி உயர்வு மற்றும் பொறுப்பு மாற்றங்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் உள்ள மாநில பொதுச்செயலாளர், மாநில செயலாளர் போன்ற பதவிகளுக்கு மாற்றாக, மண்டல அடிப்படையிலான நிர்வாக அமைப்பை உருவாக்கும் யோசனையும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் நிர்வாக செயல்பாடுகளை விரைவாக ஒருங்கிணைக்க முடியும் என அண்ணாமலை தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் உருவாகி வரும் சூழலில், அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் முயற்சி அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கட்சி தொடக்க விழாவை முன்னிட்டு, அடுத்த சில வாரங்களில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
எனினும், மேற்கண்ட தகவல்கள் தொடர்பாக அண்ணாமலை அல்லது ‘வீ தி லீடர்’ இயக்கம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Is Annamalai transforming the We the Leader movement into a political party Annamalai adopts the Kazhagam style