காரைக்காலில் அமித்ஷா கூட்டத்தில் அனுமதியின்றி பறந்த டிரோனை சுட்டு வீழ்த்திய என்எஸ்ஜி வீரர்கள்; பறக்கவிட்ட நபரிடம் தீவிர விசாரணை..!
Investigation underway against the person who flew a drone at Amit Shahs rally in Karaikal
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இதேபோன்று புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுச்சேரியின் காரைக்காலில் உள்ள பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அப்போது காரைக்கால் சந்தை திடல் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசிக்கொண்டிருந்த போது அமித்ஷாவை நோக்கி டிரோன் ஒன்று பறந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை பார்த்த அமித்ஷாவின் பாதுகாவலர்களான என்எஸ்ஜி வீரர்கள் உடனடியாக, டிரோன் எதிர்ப்பு துப்பாக்கியை வைத்து அதனை சுட்டு வீழ்த்தினர். தற்போது டிரோன் பறக்கவிட்ட நபர்..? அவரது பின்னணி..? என்பது பற்றி என்எஸ்ஜி வீரர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, டிரோன் பறக்கவிட்ட நபர் லோகேஷ் என்பதும், அவர் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் அமித்ஷாவின் பொதுக்கூட்டம் நடந்த இடத்தின் அருகே உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் விரைந்து பிடித்துள்ளனர்.
இந்நிலையில், அவர் எதற்காக டிரோனை பறக்கவிட்டார்..? என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து டிரோனை பறக்க விட்ட நபரிடம், ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி காரைக்கால் மாவட்ட எல்லைக்குள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. அதாவது, அமித்-ஷா வரும் நாளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. இதற்காக சுமார் 700 புதுச்சேரி காவல்துறையினர் மற்றும் 400 மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன், பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இருப்பினும் அதனை தாண்டியும் டிரோன் பறக்கவிட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Investigation underway against the person who flew a drone at Amit Shahs rally in Karaikal