திமுக தோல்வி குறித்து ஆய்வு தீவிரம்..ஸ்டாலின் கைக்கு போகும் ரிப்போர்ட்.. திமுகவில் விரைவில் மாற்றம்? 36 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் அதிரடி!
Investigation into DMK defeat is underway Report will go to Stalin Change in DMK soon 36 member special team in action
சட்டசபை தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கான காரணங்களை கண்டறிய, கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ள சிறப்பு கள ஆய்வு குழு மாநிலம் முழுவதும் நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது. 234 தொகுதிகளிலும் அடிமட்ட தொண்டர்களின் உண்மையான மனநிலையை அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, காரணங்களை முழுமையாக ஆய்வு செய்யும் நோக்கில் 36 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்தது. இந்த குழுவினர் தலா இரண்டு பேர் வீதம் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கட்சியின் வேட்பாளர்களின் செயல்பாடு, உட்கட்சி மோதல்கள், மக்கள் மனநிலை, வெற்றி வாய்ப்பை இழந்த காரணங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு 14 கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கேள்விகளின் அடிப்படையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் நேரடியாக கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக, இந்த விசாரணை நடைபெறும் போது சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் அல்லது தொகுதி பார்வையாளர்கள் யாரும் உடன் இருக்கக் கூடாது என்று திமுக தலைமை கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளூர் மட்ட செல்வாக்கு மற்றும் அழுத்தங்கள் இல்லாமல், அடிமட்ட தொண்டர்கள் தங்களது உண்மையான கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளும் இருவரும் தனித்தனியாக அறிக்கை தயாரித்து கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்க உள்ளனர். இதன் மூலம் தரவுகளில் முரண்பாடுகள் உள்ளதா என்பதையும் தலைமை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த கள ஆய்வின் முழு அறிக்கையும் அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. அதன் பின்னர் திமுகவில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், புதிய இளைஞர் மற்றும் பெண்கள் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு, அமைப்பு ரீதியான மாற்றங்கள் போன்றவை இந்த அறிக்கையின் அடிப்படையில் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியடைந்துள்ள திமுக, அடிமட்டத்தில் இருந்து மீண்டும் கட்சியை பலப்படுத்தும் முயற்சியாக இந்த ஆய்வை பார்க்கப்படுகிறது. அரசியல் பார்வையாளர்களும், “தோல்விக்குப் பிறகு நேரடியாக தொண்டர்களின் குரலை கேட்கும் முயற்சி திமுகவில் புதிய அணுகுமுறையாக உள்ளது” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Investigation into DMK defeat is underway Report will go to Stalin Change in DMK soon 36 member special team in action