டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்தின் இறுதி விதிகள்; புதிய ஓய்வூதிய திட்டம் அமலாகும் வரை அடிப்படை ஊதியத்தில் 30% இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்..!
Interim relief amounting to 30 percentage of the basic pay will be provided until the new pension scheme is implemented
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 04-ஆம் தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்' (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார்.
அதன்படி, அரசு ஊழியர்கள் இறுதியாகப் பெற்ற அடிப்படை சம்பளத்தில் 50 சதவீத தொகையுடன் நடைமுறையில் உள்ள அகவிலைப்படி சேர்த்து ஓய்வூதியமாக வழங்கப்படும் என, பணிக்கொடை அதிகபட்சம் ரூ.25 லட்சம் வழங்கப்படும் என
அரசாணை கடந்த ஜனவரி 09-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த டேப்ஸ் ஓய்வூதிய திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு அதன் பிறகு இத்திட்டம் நிறைவேற்றப்படும் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றது.

முன்னதாக தவெக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இருந்து வருகின்றனர்.
இது தொடர்பாக நிதித் துறை செயர் எம்.ஏ.சித்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்தின் இறுதி விதிகள் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக நிர்ணயிக்கும் பணிக்குச் சற்றுக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும்.
எனவே, 1.1.2026-க்குப் பிறகு ஓய்வு பெற்ற ஊழியர்கள் எவ்விதப் பொருளாதார பிரச்சினை இன்றி வாழ ஏதுவாக, அவர்களுக்கு இடைக்கால வாழ்வாதார ஆதரவுத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டேப்ஸ் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை இது ஓர் இடைக்கால ஏற்பாடாக இருக்கும்.

இத்திட்டத்தின்படி, பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர் கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் 30 சதவீதம்அல்லது ரூ.10,000 - இதில் எது அதிகமோ அத்தொகை இடைக்கால நிவாரணத் தொகையாக நிர்ணயிக்கப்படும். அதோடு சேர்த்து நடைமுறையில் இருக்கும் அகவிலைப்படியும் வழங்கப்படும்.
இந்த இடைக்கால நிவாரண திட்டம் 1.4.2003 அன்று அல்லது அதற்குப் பிறகு ரெகுலர் ஊதிய விகிதத்தில் (பணியமர்த்தப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இருந்தவர்கள். 1.1.2026 அன்று பணியில் நீடித்து, அதற்குப் பிறகு வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றவர்கள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த பணிக்காலத்தை நிறைவு செய்தவர்கள், பணியின்போது மரணமடைந்த அரசு ஊழியர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டும் பொருந்தும். அதேநேரத்தில் 1.1.2026-க்கு முன்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், பணியில் இருந்து விலகியவர்களுக்கும் பொருந்தாது.

ஓய்வூதியதாரர் மரணமடைந்தால் அவர் பெற்று வந்த இடைக்கால தொகையில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்தால் அவரது வாழ்க்கை துணை, அவருக்கு பிறகு 25 வயதை எட்டாத மகன்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள், வாழ்நாள் முழுவதும் சுயமாயக உழைத்து வாழ இயலாத அளவுக்குப் பார்வை குறைபாடு, மனநல பாதிப்பு, அறிவுசார் குறைபாடு அல்லது நடமாடும் திறன் குறைபாடு போன்ற உடல், மன ரீதியான மாற்றுத்திறனாளி குழந்தைகள், (வயது வரம்பு கிடையாது).
25 வயதைக் கடந்தும் திருமணமாகாத, விதவையான அல்லது விவாகரத்து பெற்ற மகள்கள் (அரசின் வருமான வரம்பு மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாழ்நாள் முழுவதும் தகுதியுடையவர்). திருமணமாகாத அரசு ஊழியர்களின் பெற்றோர், பெற்றோர் இல்லாவிட்டால், தங்களை முழுமையாகச் சார்ந்திருந்ததாக அறிவிக்கப்பட்ட உடன் பிறந்தவர்கள் ஆகியோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.
English Summary
Interim relief amounting to 30 percentage of the basic pay will be provided until the new pension scheme is implemented