“இந்தியா விரைவில் பொருளாதாரத்தில் 3-வது இடத்தை அடையும்” – துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
India will soon attain the third position in the economy Vice President CP Radhakrishnan
இந்தியா தற்போது உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வருவதாகவும், விரைவில் பொருளாதார ரீதியாக 3-வது இடத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும், எதிர்காலத்தில் முதலிடத்தை அடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற 22-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பட்டமளிப்பு விழா என்பது வெறும் பட்டத்தை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு மட்டுமல்ல என்றும், மாணவர்களின் ஒழுக்கம், செயல்பாடு மற்றும் வாழ்க்கை குறித்த அணுகுமுறையும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டியதாக கூறிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் பல்வேறு நாடுகளுக்கும் சென்றதாக குறிப்பிட்டார். இந்தியாவின் மருந்து உற்பத்தி மற்றும் மருத்துவத் துறையின் பங்களிப்புக்கு பல நாடுகள் பாராட்டு தெரிவித்ததாகவும், அண்மையில் கென்யா நாடாளுமன்றம் கூட இந்தியாவுக்கு நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இந்தியா தற்போது உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக வளர்ந்து வருவதாக தெரிவித்த சி.பி. ராதாகிருஷ்ணன், பொருளாதார ரீதியாக 4-வது இடத்தில் உள்ள இந்தியா விரைவில் 3-வது இடத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும், எதிர்காலத்தில் முதலிடத்தை அடைவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கும், எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதற்கும் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என குறிப்பிட்ட அவர், இளைஞர்கள் தங்களது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சியிலும் பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பாடத்திட்டத்தின் மூலம் பெறப்படும் கல்வி மாணவர்களுக்கு பட்டத்தை பெற்றுத் தரலாம். ஆனால், வாழ்க்கையில் சிறந்து விளங்க கல்வியுடன் ஒழுக்கம், நல்ல பழக்கங்கள் மற்றும் பொறுப்புணர்வும் அவசியம் என சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குறிப்பாக, இளைஞர்கள் மது மற்றும் போதைப் பொருட்களில் இருந்து முழுமையாக விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருவதாகவும், போதைப் பொருட்கள் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்றும் கூறினார்.
போதைப் பழக்கம் உடல்நலத்தையும் வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதால், மாணவர்கள் நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொண்டு தங்களது எதிர்காலத்தை பொறுப்புடன் கட்டமைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு இளைஞரும் நாட்டின் சட்டத் திட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட முன்னேற்றத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்றும் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாணவர்களின் வெற்றிக்கு பெற்றோர்கள் அளிக்கும் ஆதரவும் ஊக்கமும் முக்கிய காரணம் எனக் குறிப்பிட்ட அவர், பிள்ளைகளின் கல்விக்காக பாடுபட்ட பெற்றோர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவுடன் மாணவர்களின் கற்றல் முடிந்துவிடக்கூடாது என்றும், வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
“ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், புதிய கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் அல்லது தனித்திறனை மேம்படுத்தும் விஷயங்கள் என எதுவாக இருந்தாலும் தினமும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
பட்டம் பெற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் தங்களது திறமைகளை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்றும், இந்தியாவின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
English Summary
India will soon attain the third position in the economy Vice President CP Radhakrishnan