திமுகவில் உச்சகட்ட பரபரப்பு: துரைமுருகன் விலகினால் பொதுச்செயலாளர் யார்? உதயநிதிக்கு செயல் தலைவர்? அறிவாலயத்தில் யுத்தம்!
High voltage drama in the DMK Who becomes General Secretary if Duraimurugan steps down Will Udhayanidhi become Working President A battle at Arivalayam
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள கட்சித் தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக கட்சிக்குள் கருத்து மோதல்கள் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பொதுச்செயலாளர் பதவி, செயல் தலைவர் பொறுப்பு, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் அறிவாலயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது திமுக பொதுச்செயலாளராக உள்ள துரைமுருகன் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டால், அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி கட்சிக்குள் முக்கிய விவாதமாகியுள்ளது. மூத்த தலைவர்கள் சிலர் அந்தப் பதவியை கைப்பற்ற முயற்சித்து வரும் நிலையில், தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப இளைய தலைமுறையைச் சேர்ந்தவரையோ அல்லது மாற்று சமூகப் பிரதிநிதித்துவம் கொண்டவரையோ முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதனால் பொதுச்செயலாளர் விவகாரத்தில் ஒருமித்த முடிவை எடுப்பது மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கட்சியின் அடுத்த தலைமுறையை முன்னிறுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு செயல் தலைவர் என்ற புதிய பொறுப்பை உருவாக்க வேண்டும் என அவரது ஆதரவு வட்டாரங்களும், இளைஞரணி நிர்வாகிகளும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்றும், அதேபோல் கனிமொழிக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கக்கூடாது என்ற புதிய விதியைக் கொண்டுவரவும் தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பதவியை இழக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு கட்சிக்குள் மாற்றுப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.
ஆனால், இதற்கு மூத்த நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பும் உருவாகியுள்ளது.
“கட்சித் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினே இன்னும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அப்படி இருக்கும்போது இப்போதே செயல் தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்கி உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டிய அவசியம் என்ன?” என்ற கேள்வியை அவர்கள் முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.
திமுகவில் தற்போது உள்ள 78 மாவட்டக் கழகங்களை 100-க்கும் மேல் அதிகரிக்க தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரிய மாவட்டங்களைப் பிரித்து, ஒவ்வொரு மாவட்டச் செயலாளரின் கட்டுப்பாட்டிலும் குறைந்த எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே இருக்கும் வகையில் நிர்வாக அமைப்பை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீண்ட காலமாக மாவட்டச் செயலாளர் பதவியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளின் ஆதிக்கத்தை குறைத்து, இளைஞர்கள் மற்றும் புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்க முடியும் என தலைமை கருதுகிறது.
ஆனால், தங்களது அதிகார எல்லையும் அரசியல் செல்வாக்கும் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் தற்போதைய மூத்த மாவட்டச் செயலாளர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி ஒன்றிய மற்றும் வார்டு அளவிலான நிர்வாகிகளையும் மாற்ற வேண்டும் என்ற பரிந்துரைகளும் மறுசீரமைப்புக் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அடிமட்ட நிர்வாகிகளை ஒரே நேரத்தில் மாற்றினால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்து திமுகவை விட்டு வெளியேறக்கூடும் என்ற அச்சமும் கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தவெகவின் வளர்ச்சி ஏற்கனவே திமுகவுக்கு சவாலாக மாறியுள்ள நிலையில், உட்கட்சி அதிருப்தி காரணமாக மேலும் நிர்வாகிகள் வெளியேறுவதைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.
இதனால் மூத்த நிர்வாகிகளின் எதிர்ப்பை சமாளிப்பது, புதிய தலைமுறைக்கு அதிகாரத்தைப் பகிர்வது, மாவட்ட அமைப்பை மாற்றுவது மற்றும் அதிருப்தியாளர்கள் வெளியேறாமல் தடுப்பது என பல்வேறு சவால்களுக்கு இடையே திமுக தலைமை தனது மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
வரவிருக்கும் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்களில் இந்த விவகாரங்களில் எத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதுதான் திமுகவின் அடுத்தகட்ட அரசியல் பாதையை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
English Summary
High voltage drama in the DMK Who becomes General Secretary if Duraimurugan steps down Will Udhayanidhi become Working President A battle at Arivalayam