"முதல்வர் விஜய்யின் நண்பர் என்பதால்தான் இன்று அமைச்சராக நிற்கிறேன்" – விஜய் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி
I stand here as a minister today only because I am a friend of Chief Minister Vijay Minister Srinath speaks movingly about Vijay
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அமைச்சர்களின் பொதுப் பேச்சுகள் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத், தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் விஜய்யுடனான தனது நட்பைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் ஸ்ரீநாத், தனது குடும்பத்திற்கும் அந்த கல்வி நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பை நினைவுகூர்ந்தார்.
அவர் பேசியதாவது:"என்னுடைய தாயார் படித்த கல்லூரியின் நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணமாக உள்ளது. தூத்துக்குடியில் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் இருந்தது. அதனால் இந்த நகரத்தின் மீது எனக்கு தனிப்பட்ட பாசம் உள்ளது. என்னுடைய தாயார் மட்டுமல்ல, பெரியம்மா, சகோதரிகள் உள்ளிட்ட என் குடும்பத்தினர் பலரும் இந்தக் கல்லூரியில்தான் கல்வி பயின்றுள்ளனர்.
"இந்த நிகழ்ச்சியில் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி கற்றுவிட்டு வெளியேறுவது மட்டுமல்லாமல், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கு முன்னாள் மாணவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்."
முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு குறித்து பேசிய அவர், சமூக வலைதளங்கள் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்றார்.
"நான் சென்னை எக்மோரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் படித்தேன். அங்கு நடைபெறும் முன்னாள் மாணவர் சந்திப்பு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் தவறவிடாமல் பங்கேற்பேன். அந்த பழக்கத்தை அனைவரும் பின்பற்றினால், நாம் கல்வி கற்ற நிறுவனங்களுக்கு அது பெரிய உதவியாக இருக்கும்," என்றார்.
நட்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் ஸ்ரீநாத், தனது அரசியல் பயணத்திற்கான காரணத்தையும் பகிர்ந்துகொண்டார்."பள்ளி, கல்லூரி நாட்களில் உருவாகும் நட்புதான் வாழ்க்கை முழுவதும் தொடரும் மிகப்பெரிய உறவாக மாறுகிறது. அந்த நட்பை எப்போதும் மதிக்க வேண்டும். எந்தச் சூழலிலும் நண்பர்களுடனான தொடர்பை இழக்கக் கூடாது.
"நான் எந்த அரசியல் பின்னணியும் இல்லாதவன். இன்று இந்த மேடையில் அமைச்சராக நிற்பதற்குக் காரணம் என்னுடைய நண்பரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய். அவருடைய நண்பராக இருந்ததால்தான் இன்று இந்தப் பொறுப்பில் இருக்கிறேன். அதனால், வாழ்க்கையில் நல்ல நட்பை என்றும் மதித்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்," என்று அவர் உருக்கமாகப் பேசினார்.
அமைச்சர் ஸ்ரீநாத்தின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
English Summary
I stand here as a minister today only because I am a friend of Chief Minister Vijay Minister Srinath speaks movingly about Vijay