மராட்டிய அரசியலில் பேரதிர்ச்சி!விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு...! -இரங்கல் தெரிவித்த மோடி,திரௌபதி முர்மு
huge shock Maharashtra politics Ajit Pawar dies plane crash Modi and Draupadi Murmu express condolences
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
விமானம் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்ற வேளையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து சிதறியது.

இன்று காலை 8.45 மணியளவில் நிகழ்ந்த இந்த பயங்கர விபத்தில், தரையில் மோதி விழுந்த விமானம் உடனடியாக தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த கோர விபத்தில், துணை முதல்வர் அஜித் பவார் உட்பட, அவருடன் பயணித்த பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானத்தை இயக்கிய விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த துயரச் செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உள்ளிட்டோரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு
இதுகுறித்து ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாராமதியில் நிகழ்ந்த விமான விபத்தில் மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.அஜித் பவாரின் அகால மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
மராட்டிய மாநிலத்தின் வளர்ச்சிக்கும், குறிப்பாக கூட்டுறவுத் துறையின் முன்னேற்றத்திற்கும் அவர் அளித்த பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் இந்த துயரத்தை தாங்கும் வலிமையை கடவுள் அருளட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், “மராட்டிய மாநிலம் பாராமதியில் நடந்த விமான விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தைரியமும் வலிமையும் அளிக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
அஜித் பவார் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர். கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் வலுவான தொடர்பு கொண்டவர். கடின உழைப்பும், மராட்டிய மக்களுக்கான சேவையிலும் முன்னணியில் இருந்த ஆளுமை. நிர்வாகத் திறன், ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அவரது முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. அவரது அகால மறைவு பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.
English Summary
huge shock Maharashtra politics Ajit Pawar dies plane crash Modi and Draupadi Murmu express condolences