பட்டாசுத் தொழிலாளர்களின் எதிர்காலம் என்ன...? ஆலைகளை திறக்கக் கோரி சிவகாசியில் சி.பி.ஐ. போராட்டம்...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரத்தையும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் தாங்கி நிற்கும் சிவகாசி பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவேற்றியுள்ள மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் சுமார் 90 விழுக்காடு பங்களிப்பை வழங்குவது விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு தொழில். ஆண்டுக்கு ரூ.6,000 கோடிக்கும் அதிகமான வர்த்தகத்தை ஈட்டித் தரும் இந்தத் தொழில், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

எனவே, சிவகாசியின் பட்டாசு தொழிலை பாதுகாப்பது என்பது ஒரு தொழிலை மட்டும் பாதுகாப்பதல்ல; அதனை நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் காப்பதாகும்.விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,100 பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. இவற்றில் சுமார் 200 தொழிற்சாலைகள் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை என்ற காரணத்தால் மூடப்பட்டுள்ளன.

இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, அவர்களது குடும்பங்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட பட்டாசு விபத்துகளில் 169 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி ஒருபோதும் நிகழாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மேம்படுத்துவது, விதிகளை மீறி செயல்படும் சட்டவிரோத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.

அதேநேரத்தில், பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்து, அரசின் விதிமுறைகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ள ஆலைகளையும் தொடர்ந்து மூடி வைப்பது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கும். எனவே, மூடப்பட்டுள்ள அனைத்து ஆலைகளையும் அதிகாரிகள் மீண்டும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவேற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு உடனடியாக மீண்டும் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்.தொழிலாளர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் ஒவ்வொரு ஆலையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும். பணியாளர்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி, அவசரகால நடவடிக்கைகள் மற்றும் விபத்து தடுப்பு முறைகள் குறித்து தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல், அதேசமயம் தொழிலையும் முடக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும்.சிவகாசி பட்டாசு தொழில் என்பது வெறும் வணிகம் சார்ந்த துறை மட்டுமல்ல. தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்த தொழிலாகும்.

எனவே, தொழில் பாதுகாப்பு என்ற பெயரில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்குவதையும், தொழிலை பாதுகாக்கும் பெயரில் தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதையும் அரசு அனுமதிக்கக் கூடாது.“தொழில் முக்கியம்; தொழிலாளர்களின் உயிர் மிக மிக முக்கியம்” என்ற புரிதலுடன் தமிழக அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று, ஆகஸ்ட் 17-ம் தேதி, சிவகாசியில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.எனவே, மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை மறுஆய்வு செய்து, பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்துள்ள தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பையும், பட்டாசு தொழிலின் எதிர்காலத்தையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What future firecracker workers CBI protests Sivakasi demanding opening factories


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->