2,500 ஆண்டுகள் பழமையான அதிசயம்...! புதைப்பிடத்தில் வரிசையாக அடுக்கப்பட்ட சங்குகள்...! - வெளிவந்த அரிய தொல்பொருட்கள்...! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் புதைப்பு தளத்தில் இதுவரை எந்தப் பகுதியிலும் கண்டறியப்படாத வித்தியாசமான அமைப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இறந்தவர்களை புதைத்த இடத்தைச் சுற்றிலும் கல்வட்டங்களைப் போன்று சங்குகளை வரிசையாக அடுக்கி வைத்திருப்பது தொல்லியல் ஆய்வாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்டாச்சிபுரம் ஒன்றியம் ஆதிச்சனூர் – வசந்தகிருஷ்ணாபுரம் பகுதியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் 20 முதல் 30 மீட்டர் சுற்றளவு கொண்ட 10-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அகழாய்வு இயக்குநர் பொ.கோ.லோகநாதன், உதவி இயக்குநர்கள் பரத்குமார், சுரேஷ் ஆகியோர் தலைமையில் 7 கல்வட்டங்களில் தற்போது ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அகழாய்வின்போது, பழங்கால மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்த விதம் குறித்த பல்வேறு தடயங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மண் தொட்டியைப் போன்ற ஈமப்பேழைக்குள் உடலை வைத்து புதைக்கும் முறை மற்றும் உடலை தரையில் கிடத்தி நேரடியாக புதைக்கும் முறை என இருவிதமான புதைப்பு முறைகள் கண்டறியப்பட்டுள்ளன.இதில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், புதைக்குழிகளைச் சுற்றிலும் கல்வட்டம் அமைப்பதைப் போன்று சங்குகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஒன்று அல்லது இரண்டு அடுக்குகளாக முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த சங்குகள், அக்கால மக்களின் இறுதிச்சடங்கு நடைமுறைகள் குறித்த புதிய தகவல்களை வெளிப்படுத்தும் முக்கியத் தடயமாக பார்க்கப்படுகின்றன. இதுபோன்ற சங்குகளைப் பயன்படுத்திய புதைப்பு முறை நாட்டின் வேறு எந்தத் தொல்லியல் தளத்திலும் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் லோகநாதன் கூறியதாவது,"வடமாவட்டங்களில் மலைப்பாங்கான பகுதிகள் அதிகம் காணப்படுவதால், பழங்காலத்தில் இறந்தவர்களை புதைத்த பின்னர், அந்தப் புதைக்குழியைச் சுற்றிலும் சிறிய கற்களை கொண்டு நான்கு புறமும் சுவர் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அதன் மேல் மிகப்பெரிய கல்லை மூடுகல்லாக வைத்து, அதைச் சுற்றிலும் கற்களை வட்ட வடிவில் வரிசையாக அடுக்கி வைத்துள்ளனர்.

இந்த அமைப்பே கல்வட்டம் என அழைக்கப்படுகிறது.ஆதிச்சனூரிலும் இதுபோன்ற கல்வட்டங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு 10 முதல் 20 மீட்டர் சுற்றளவு கொண்ட பெரிய மூடுகற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைச் சுற்றிலும் 2 முதல் 3 அடுக்குகளாக கல்வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், மூடுகல்லின் மீதும், அதனை அகற்றிய பின்னர் புதைக்குழியைச் சுற்றிலும் ஒன்று அல்லது இரண்டு வரிசைகளிலும் சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதைப்பிடத்தில் சங்குகளை இதுபோன்று முறையாக அடுக்கி வைத்திருக்கும் பழக்கம் தொடர்பான சான்றுகள் வேறு எந்த இடத்திலும் இதுவரை கிடைக்கவில்லை.இதுவரை 3 கல்வட்டங்களில் இருந்த மூடுகற்கள் அகற்றப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் 2 கல்வட்டங்களில் ஈமப்பேழை புதைப்பு முறையும், மற்றொரு கல்வட்டத்தில் தரைமட்ட புதைப்பு முறையும் இருந்தது தெரியவந்துள்ளது.ஒரு புதைக்குழியில் ஈமப்பேழையின் இடுப்பு அல்லது கால் பகுதியைச் சேர்ந்த எலும்பின் சிறிய பகுதி மட்டுமே வெளிப்பட்டுள்ளது.

அந்த எலும்பைச் சுற்றிலும் சடங்கு சார்ந்த பொருட்கள் முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகே சங்கு ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்களும் கிடைத்துள்ளன.மேலும், சங்குகளால் உருவாக்கப்பட்ட கழுத்தணியில் நட்சத்திர வடிவ குறியீடு பொறிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொரு புதைக்குழியில் செம்புக் கிண்ணமும், வேறொரு புதைக்குழியில் இரும்பு வாளும் கிடைத்துள்ளன.இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில், ஆதிச்சனூர் பகுதி சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருவதால், அவை முழுமையாக நிறைவடைந்த பின்னரே இப்பகுதியின் பழங்கால வாழ்க்கை முறை, இறுதிச்சடங்கு நடைமுறைகள் மற்றும் பண்பாடு குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2500 year old wonder Conch shells stacked burial ground Rare artifacts unearthed


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->