அனல் பறக்கும் இடைத்தேர்தல் களம்...! மதுராந்தகம், தாராபுரத்தில் திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்...!
Hot by election field DMK Tvk candidates file nominations Madurathangam Tarapuram
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதிக்கு மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதிக்கு சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமனும், தாராபுரம் தனித்தொகுதியில் வக்கீல் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர்.இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சுகன்யா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதேபோல் மதுராந்தகம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் பரந்தாமனும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பரந்தாமன், மதுராந்தகம் தொகுதிக்கு நம்பிக்கைக்குரிய சட்டசபை உறுப்பினர் தேவை என்றும், அதற்காக மக்கள் தன்னை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தவெக சார்பில் தேர்தல் களத்தில் நிற்கும் விஜய், பெரம்பூர் தொகுதிக்கும், திருச்சி தொகுதிக்கும் கூட புதியவர் என்று அவர் விமர்சித்தார்.மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சென்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதனால் மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. மற்றும் தவெக வேட்பாளர்களின் நேரடி தேர்தல் நடவடிக்கைகள் மேலும் வேகமெடுத்துள்ளன.இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் 2 கட்டங்களாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, வருகிற 25-ந்தேதி மதுராந்தகத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கும் விஜய், 27-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2 மற்றும் 3-ந்தேதிகளில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் விஜய் மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.
English Summary
Hot by election field DMK Tvk candidates file nominations Madurathangam Tarapuram