'விஜய்க்கு அழுத்தங்கள் வந்தபோது உறுதுணையாக இருந்தவர்'...! - டெல்லி சிறப்பு பிரதிநிதி வெங்கட நாராயணா நியமனத்தின் பின்னணியை உடைத்த அமைச்சர் நிர்மல்குமார்...!
He supportive Vijay when he under pressure Minister Nirmal Kumar breaks down background behind appointment Delhi Special Representative Venkata Narayana
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கான காரணங்களை அமைச்சர் நிர்மல்குமார் விரிவாக விளக்கினார்.மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் நிர்மல்குமார், சு.வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், மதுரை மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சியில் தற்போது பணியாற்றி வரும் ஒப்பந்த நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் மீது புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கழிவு மேலாண்மை பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது தொடரும் என்றும், தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார். முந்தைய நடைமுறைகளே தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும் கூறினார்.
மதுரை மாநகராட்சி எல்லைக்குள் சேதமடைந்த சாலைகள் குறித்தும் தீவிர ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பல இடங்களில் தற்காலிகமாக இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து, தனியார் இடங்களில் செயல்படும் மையங்களை அரசு கட்டுப்பாட்டிலுள்ள இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட நாராயணா கர்நாடகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.தலைவர் விஜய்க்கு பல்வேறு அழுத்தங்கள் ஏற்பட்ட காலகட்டங்களில் உறுதுணையாக இருந்தவர்தான் வெங்கட நாராயணா என்றும், நம்பிக்கைக்குரிய ஒருவருக்கே இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து முக்கிய நிர்வாக முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும், ஒருங்கிணைப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்வார் என்றும் கூறினார்.இதுவரை அலங்காரப் பதவியாக மட்டுமே பார்க்கப்பட்ட இந்த பொறுப்பு, தற்போது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசை உருவாக்க பாடுபட்டவர்கள் முதல்-அமைச்சரின் ஆலோசகர்களாக இருப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களுக்கு சலுகை வழங்க முடியாது என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும், அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மின்விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நிலையான தீர்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.மேலும், 9 டெண்டர்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
ஹார்டுடிஸ்க் விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் எந்த வகையிலும் சாதிப்பெயர் இடம்பெறாது என்று அமைச்சர் நிர்மல்குமார் உறுதியாக தெரிவித்தார்.
அத்தகைய திட்டம் அரசிடம் இல்லை என்றும், அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து பேசியபோது பதற்றம் காரணமாக வார்த்தைத் தேர்வில் தவறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்தார்.
English Summary
He supportive Vijay when he under pressure Minister Nirmal Kumar breaks down background behind appointment Delhi Special Representative Venkata Narayana