ஜோதிடருக்கு அரசுப் பணி...? - எழுந்த எதிர்ப்பால் உத்தரவை வாபஸ் பெற்ற தமிழக அரசு...!
Government job astrologers Tamil Nadu government withdraws order due to opposition
முதலமைச்சர் விஜய் அவர்களின் சிறப்பு பணி அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோதிடராக பரவலாக அறியப்படும் அவர், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்த நிலையில், அவருக்கு அரசின் முக்கிய நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது.இந்த நியமனத்திற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டிருந்தார்.

ஆனால் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கடும் எதிர்ப்புகள் வெடித்தன.“ஜோதிடராக செயல்பட்டு வந்த ஒருவருக்கு அரசின் அரசியல் ஆலோசனை பொறுப்பு வழங்கப்படுவது எந்த அடிப்படையில்?” என்ற கேள்வியை முன்வைத்து பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள், “ஜோதிட கணிப்புகள் அரசியல் நிர்வாக முடிவுகளுக்கு அடிப்படையாக மாறக்கூடாது” எனக் கூறி இந்த நியமனத்திற்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்தன.இந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இந்த நியமனத்தை கடுமையாக விமர்சித்து அவையில் கண்டனம் தெரிவித்தனர்.
ஆட்சியின் நிர்வாக நம்பகத்தன்மையை பாதிக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.இந்த அரசியல் சர்ச்சை தீவிரமடைந்த சூழலில், முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை நியமித்த உத்தரவை தமிழக அரசு திடீரென திரும்பப் பெற்றுள்ளது.
ஆதரவு கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து, வெறும் 24 மணி நேரத்துக்குள் நியமன உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.இதற்கிடையில், இந்த நியமனத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஆர். ரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், எந்தவித நடைமுறை விதிகளையும் பின்பற்றாமல், பொது அறிவிப்பு வெளியிடாமல் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பது சட்டத்திற்கும் அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கும் முரணானது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என சட்ட வட்டாரங்களில் தெரிவிக்கப்படுவதால், இந்த விவகாரம் அரசியல் மட்டுமல்லாமல் சட்ட ரீதியிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
English Summary
Government job astrologers Tamil Nadu government withdraws order due to opposition