ஆட்சி மாறியது... ஆனால் கடன் சுமை இன்னும் மாறவில்லையா...? ரூ.12,044 கோடி ஒரே மாதத்தில் கடன்...! - Seithipunal
Seithipunal


‘ஆட்சி மாறினால் காட்சி மாறும்’ என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் மக்களிடம் எழுவது இயல்பு. அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் த.வெ.க.விடம் தமிழக மக்கள் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அதன் முதல் நிதிநிலை அறிக்கையும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான தமிழக அரசின் வருவாய், செலவு மற்றும் கடன் தொடர்பான புள்ளிவிவரங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன,தமிழக அரசுக்கு வரி வருவாய் மற்றும் வரி அல்லாத வருவாய் என பல்வேறு வழிகளில் நிதி கிடைக்கிறது.

மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், நிலம் தொடர்பான வருவாய், விற்பனை மற்றும் வர்த்தக வரி, மாநில ஆயத்தீர்வை, மத்திய அரசின் வரிப் பகிர்வு உள்ளிட்டவை முக்கிய வருவாய் ஆதாரங்களாக உள்ளன.மேலும், மத்திய அரசின் மானியங்கள் உள்ளிட்ட வரி அல்லாத வருவாயும் தமிழக அரசுக்கு கிடைத்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.89,718 கோடியாக உள்ளது.இதில் வரி மூலம் ரூ.82,566 கோடியும், வரி அல்லாத வகையில் ரூ.4,070 கோடியும், மத்திய அரசின் மானியமாக ரூ.3,082 கோடியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதே காலகட்டத்தில் அரசின் மொத்த செலவு ரூ.1.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ரூ.25,267 கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.அரசின் மொத்த செலவில் ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி செலவு கணிசமான தொகையாக உள்ளது.

ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் கடனுக்கான வட்டியாக ரூ.21,176 கோடி செலுத்தப்பட்டுள்ளது.அதேபோல், ஓய்வூதியத்திற்காக ரூ.17,237 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் வருவாயை விட செலவு அதிகமாக இருப்பதால், பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு செலவினங்களை சமாளிக்க கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.கடன் பத்திரங்கள் வெளியிடுவதுடன், பல்வேறு வங்கிகளிடமிருந்தும் அரசு கடன் பெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் தமிழக அரசு பெற்ற மொத்த கடன் ரூ.32,925 கோடியாக உள்ளது.

ஜூன் மாதம் வரையிலான நிலவரத்தில் ரூ.20,881 கோடியாக இருந்த கடன், ஒரே மாதத்தில் ரூ.12,044 கோடி அதிகரித்துள்ளது.கடந்த 2025-26-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.85,876 கோடியாக இருந்தது.

அந்த காலகட்டத்தில் மொத்த செலவு ரூ.1.09 லட்சம் கோடியாகவும், பெறப்பட்ட கடன் ரூ.30,956 கோடியாகவும் இருந்தது.இதனுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் கடன் ரூ.32,925 கோடியாக அதிகரித்துள்ளது.

புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள சூழலில், ஒருபுறம் அரசின் வருவாய் அதிகரித்தாலும் மறுபுறம் செலவு மற்றும் கடன் அளவும் உயர்ந்திருப்பது தமிழகத்தின் நிதிநிலை குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

government changed but debt burden has not changed yet 12044 crore debt single month


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->