தொழிலாளர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஜி கே வாசன்.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு – பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க, தொழிலாளர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மாநிலத்தில் பட்டாசுத் தயாரிக்கும் தொழிலில் ஏற்பட்டுள்ள தடையை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1,700 பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலைகளில் நேரடியாகவும், சார்பு தொழில் மூலமாகவும் சுமார் 10 இலட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி பட்டாசுத் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயின் அடிப்படையிலேயே அமைகிறது. 

இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுகிறது, பட்டாசுத் தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் வேதிப்பொருளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட சில காரணத்தைக் காட்டி பட்டாசை தடை செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடிக்கிடக்கின்றன. இதனால் பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள். 

பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் இத்தொழிலை நம்பித் தான் வாழ்கிறார்கள். இவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாத நிலையில் மாற்று வேலை கொடுப்பதற்கு அரசோ அல்லது தனியாரோ முன்வரவில்லை. அது மட்டுமல்ல விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் செய்யலாம் என்றால் அதற்கேற்ற சீதோஷ்ண நிலை, மழையளவு உள்ளிட்ட சாதகமான சூழலும் இல்லை.

பட்டாசுத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள் சம்பந்தமாக அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் தமிழக அரசு பட்டாசுத் தொழில் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும். 

குறிப்பாக சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, பட்டாசு ஆலையின் பாதுகாப்பு, தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, இலாபகரமாக தொழிலில் ஈடுபடுவது உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொண்டு பட்டாசுத் தொழிலைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை.
எனவே தமிழக அரசு, பட்டாசுத் தொழில் சம்பந்தமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை கவனத்தில் கொண்டு, பட்டாசுத் தொழிலில் ஈடுபடுவோரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க, தொழிலாளர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan statement on dec 29


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->