'வருங்கால பிரதமர் ராகுல் காந்தி உடன் முதல்வர் விஜய்'; ஏஐ வீடியோவை பகிர்ந்த கிரிஷ் சோடங்கர்..!
Girish Chodankar shares an AI video featuring Chief Minister Vijay alongside Rahul Gandhi
முதல்வர் விஜய், வருங்கால பிரதமர் ராகுல் காந்தி என குறிப்பிட்டு ஏஐ வீடியோவை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், 118 என்ற பெரும்பான்மை இடங்களை பெறாத நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு இழுபறி நிலை ஏற்பட்டது.
அதன்படி, முதலாவதாக காங்கிரஸ் தனது 05 இடங்களை கொடுத்து ஆதரவு கரம் நீட்டியது. அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் - 02, மார்க்சிஸ்ட் - 02, விசிக - 02 மற்றும் ஐயுஎம்எல் - 02 ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் நாளை விஜய் தலைமையிலான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்காக உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி, தவெக கூட்டணி அரசில் பங்கேற்கிறது. மற்ற கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளன.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், புதிய ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். இதை அறிவிக்கும் விதமாக தனது பாணியில் இருவரும் இணைந்து வரும் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவை பல்வேறு தருணங்களில் பலரும் வெவ்வேறு விதமாக மாற்றி பகிர்ந்தது உண்டு.
அந்தவகையில், தற்போது தவெக உடன் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தல்களை இரண்டு கட்சிகளும் இணைந்து சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் மற்றும் ராகுல் காந்தி வருவது போல அந்த வீடியோவை மாற்றி கிரிஷ் சோடங்கர் பகிர்ந்துள்ளார். அதற்கு 'வருங்கால பிரதமர் ராகுல் காந்தி உடன் முதல்வர் விஜய்' என அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார். இப்போது அது சமூக வலைதளத்தில் வைரலாகி கவனம் பெற்றுள்ளது.
English Summary
Girish Chodankar shares an AI video featuring Chief Minister Vijay alongside Rahul Gandhi