சேவல் சண்டைக்கு தடை...'எந்த அதிகாரத்தில் தடை விதித்தீர்கள்'...? - டி.ஜி.பி. சுற்றறிக்கைக்கு ஐகோர்ட்டு கேள்வி - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் சேவல் சண்டைக்கு தடை விதித்து டி.ஜி.பி. பிறப்பித்த சுற்றறிக்கையின் சட்டப்பூர்வ அதிகாரம் குறித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி கேள்வி எழுப்பியுள்ளது.தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து டி.ஜி.பி. கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுற்றறிக்கை பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களின்போது சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி, ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், கிராமப்புறங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் காலம் காலமாக நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்தப் போட்டிகள் காவலர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், சேவல் சண்டையில் சூதாட்டம் நடைபெறுவதில்லை என்றும், விலங்குகளுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டி.ஜி.பி. பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து, கோவில் திருவிழாக்களில் சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மிருக வதை தடை சட்டம் மற்றும் சென்னை ஐகோர்ட்டு, மதுரை அமர்வு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையிலேயே சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நிலுவையில் இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் அளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசுத் தரப்பின் அவகாசக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்.

மேலும், மனுவுக்கு பதில் அளிக்க காவலர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.இதனால், சேவல் சண்டைக்கு தடை விதித்த டி.ஜி.பி.யின் சுற்றறிக்கையின் சட்டப்பூர்வ அதிகாரம் தொடர்பான விவகாரம் அடுத்த விசாரணையில் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ban on cockfighting Under what authority did you impose the ban HC questions DGP circular


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->