மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட அதிகாரி... ரூ.7 ஆயிரத்துடன் கையும் களவுமாக சிக்கியது எப்படி...?
How did official who asked bribe electricity connection get caught red handed 7000
சென்னை மேற்கு தாம்பரத்தில் மின் இணைப்பு தொடர்பான பணியை செய்து தருவதற்காக ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.12,540 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் சிவசெல்வன் (47). இவர் தனது தந்தை ஜெயராமன் பெயரில் உள்ள வீட்டுக்கு கூடுதல் ஒற்றை மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி கடப்பேரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

இதற்கான கட்டணத்தையும் முறையாக செலுத்தியுள்ளார்.ஆனால், அவரது விண்ணப்பம் கடந்த மாதம் 6-ந் தேதி நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, வீட்டின் மின் திறனை 1 கே.வி.யில் இருந்து 3 கே.வி.யாக உயர்த்தக்கோரி கடந்த மாதம் 10-ந் தேதி மீண்டும் விண்ணப்பித்தார்.
இந்த பணியை செய்து தருவதற்காக கடப்பேரி மின்வாரிய அலுவலக உதவி பொறியாளர் சந்திரன், சிவசெல்வனிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர், பேரம் பேசி அந்த தொகையை ரூ.7 ஆயிரமாக குறைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.அரசு பணியை மேற்கொள்ள லஞ்சம் வழங்க விரும்பாத சிவசெல்வன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவலர்கள், சிவசெல்வனிடம் ரசாயனப் பொடி தடவிய ரூ.7 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை சந்திரனிடம் கொடுக்கும்போது அவரை கையும் களவுமாக பிடிக்க காவலர்கள் திட்டமிட்டனர்.சிவசெல்வன் பணத்தை கொடுக்க மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றபோது, அங்கு சந்திரன் இல்லை.
இதையடுத்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது சந்திரன், தாம்பரம் சானடோரியம் பகுதிக்கு வருமாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி சிவசெல்வன் அங்கு சென்று சந்திரனை சந்தித்து, காவலர்கள் கொடுத்திருந்த ரூ.7 ஆயிரம் பணத்தை அவரிடம் வழங்கினார்.
அந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அதிரடியாக செயல்பட்டு சந்திரனை கையும் களவுமாக பிடித்தனர்.தொடர்ந்து, சந்திரனிடம் இருந்த ரூ.12,540 பணத்தையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து அழைத்துச் சென்ற காவலர்கள், லஞ்சம் பெற்றது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
How did official who asked bribe electricity connection get caught red handed 7000