கண்துடைப்பு கணக்கெடுப்பா...? 'மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காதீர்கள்...! - சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் - Seithipunal
Seithipunal


சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயரில் நடத்தப்படும் கண்துடைப்பு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு, அறிவியல் அடிப்படையிலும், வெளிப்படைத்தன்மையுடனும், முறையான நடைமுறைகளுடனும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்றும், சமூகநீதியின் அடித்தளத்தை பலவீனப்படுத்தும் வகையில் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

“மக்கள்தொகையில் எந்த சமூகத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறதோ, அதற்கேற்ப அவர்களின் உரிமையும், வாய்ப்பும், அதிகாரப் பங்கும் அமைய வேண்டும்” என்ற அடிப்படையில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை அகற்றி, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவமும் அதிகாரப் பகிர்வும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ராகுல்காந்தி 2023-ம் ஆண்டு நியாய யாத்திரையை முன்னெடுத்ததாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

அந்தப் போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட மக்கள் எழுச்சியும், எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தமும் காரணமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசு முன்வந்தது போல் காட்டிக்கொண்டாலும், நடைமுறையில் அதை குழப்பமான முறையில் செயல்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக எண்ணிம முறையில் நடத்தப்படுவதாக மத்திய அரசு விளம்பரப்படுத்தி வரும் நிலையில், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதி கிராமங்களில் அவசர அவசரமாக தொடங்கப்பட்டுள்ள பணிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு போதுமான பயிற்சியும் தெளிவான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களில் முறையான ஆவணச் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள விவரங்கள்கூட முறையாகப் பதிவு செய்யாமல் செயலியில் தானாகவே பதிவு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற நடைமுறைகள் தொடர்ந்தால், தொடக்க நிலையிலேயே கணக்கெடுப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பில் ஏற்படும் சிறிய தவறுகள்கூட எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.1931-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 4,147 சாதிகள் இருந்த நிலையில், 2011-ம் ஆண்டு சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பில் தெளிவற்ற திறந்தவெளிக் கேள்விகளின் காரணமாக அந்த எண்ணிக்கை பல லட்சங்களாக சிதறியதாக மத்திய அரசே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தெளிவான பட்டியல்கள் இருப்பதைப் போல, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதிப் பட்டியல்களையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அதற்கு பதிலாக மீண்டும் தெளிவற்ற கேள்விகளை முன்வைத்து கணக்கெடுப்பு நடத்தினால், ஒரே சாதி பல்வேறு பெயர்களில் பிரிந்து பதிவு செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான மக்கள் தொகை குறித்த தரவுகள் சிதைக்கப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதன் விளைவாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு மட்டுமின்றி, நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு உரிமைகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.பீகார் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், அதுபோன்ற முறையான நடவடிக்கையை நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசுக்கு உண்மையான நோக்கம் இருந்தால், ஒன்றிய அளவில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதிப் பட்டியலையும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பட்டியலையும் அடிப்படையாகக் கொண்டு துல்லியமான தரவுகளை சேகரித்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சாதிவாரி தரவுகள் நம்பகமானவை அல்ல என்ற காரணத்தை முன்வைத்து இடஒதுக்கீட்டின் உச்சவரம்பை மாற்றுவதற்கான வாய்ப்பையும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளையும் மறுக்கும் முயற்சி நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பே அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும், காங்கிரஸ் தலைவர் கார்கேவும் பிரதமருக்கு கடிதம் எழுதியதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.இருப்பினும், தேவையான முன்னேற்பாடுகள், தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் முறையான பயிற்சிகள் இல்லாமலேயே கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கணக்கெடுப்பு முடிந்த பிறகு தரவுகள் நம்பகத்தன்மையற்றவை என்று கூறி அவற்றை பயன்படுத்தாமல் ஒதுக்கிவிடும் நிலை ஏற்பட்டால், மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் வீணாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.தற்போதைய நடைமுறைகளில் தொடர்ந்து குளறுபடிகள் நீடித்தால், இறுதியில் கிடைக்கும் தரவுகள் சமூகநீதிக்குப் பயன்படாத நிலை ஏற்படும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மக்களின் உண்மையான சமூக நிலையை அறிந்து, அதற்கேற்ப கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் இடஒதுக்கீட்டு உரிமைகளை உறுதி செய்வதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மக்களின் வரிப்பணத்தை செலவழித்து பெயரளவில் ஒரு கணக்கெடுப்பை நடத்திவிட்டு, பின்னர் அதன் தரவுகள் நம்பகத்தன்மையற்றவை என்று கூறுவது சமூகநீதிக்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயரில் நடத்தப்படும் கண்துடைப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அறிவியல் அடிப்படையில், வெளிப்படையான முறையில், முறையான தரவுகளை சேகரிக்கும் வகையில் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Blind census Dont waste people tax money Manickam Thakur condemns central government caste based census


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->