கல்லூரி முதல் சினிமா வரை...இனி எப்போதுமே விஜயுடன் தான்...! தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை...! - பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் 14-வது முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்றதிலிருந்து மக்கள் நலனை மையமாகக் கொண்டு பல அதிரடி நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்து வருகிறார்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளின் அருகே செயல்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டமை, கிட்னி முறைகேடு விவகாரத்தில் தீவிர விசாரணை உத்தரவு, போதை தடுப்பு சிறப்பு பிரிவுகள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகரும், விஜய்யின் நீண்டகால நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத் மீண்டும் அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்துள்ளார். கல்லூரி காலம் முதல் விஜய்யுடன் நட்பில் இருந்த அவர், திரையுலகின் ஆரம்ப கட்டத்திலிருந்தே விஜய்யுடன் இணைந்து பயணித்து வந்தார்.விஜய் அரசியல் கட்சி தொடங்கிய தருணத்திலிருந்தே அவருக்கு முழு ஆதரவாக செயல்பட்டு வந்த ஸ்ரீநாத், தன்னையும் த.வெ.க. இயக்கத்தில் இணைத்துக்கொண்டு கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

அதன் பலனாக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விஜய் அவருக்கு வாய்ப்பு வழங்கினார்.அந்த வாய்ப்பை திறம்பட பயன்படுத்திய ஸ்ரீநாத், தீவிர தேர்தல் பிரசாரத்தின் மூலம் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றில் முதல் சட்டமன்ற உறுப்பினராக இடம்பிடித்தவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

52 வயதான ஸ்ரீநாத், சென்னை பிறப்பிடமாகக் கொண்டவர். 1973-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி பிறந்த அவர், விஜய்யின் கல்லூரி நண்பராக அறியப்படுகிறார். “நாளைய தீர்ப்பு” திரைப்படத்தில் விஜய்யின் நண்பராக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் “மாண்புமிகு மாணவன்” உள்ளிட்ட படங்களிலும் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.

அதனைத் தொடர்ந்து “12 பி” திரைப்படத்தில் நடித்ததோடு, உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே”, “காதல் வைரஸ்”, “அலை”, “உள்ளம் கேட்குமே”, “வட்டாரம்” உள்ளிட்ட திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்றார். குறிப்பாக “உள்ளம் கேட்குமே”, “உன்னாலே உன்னாலே”, “சந்தோஷ் சுப்ரமணியம்”, “தாம் தூம்” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

“குட்டி”, “உத்தமபுத்திரன்”, “ரௌத்திரம்”, “மனம் கொத்தி பறவை” போன்ற திரைப்படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பு தனி கவனம் பெற்றது. விஜய்யுடன் “வேட்டைக்காரன்”, “மாஸ்டர்” திரைப்படங்களிலும் இணைந்து நடித்துள்ளார். “ஜனநாயகன்” திரைப்படத்திலும் அவர் நடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தன்னை நிரூபித்த ஸ்ரீநாத், “முத்திரை”, “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”, “லெக் பீஸ்” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “காதலிக்க நேரமில்லை” தொடரிலும் நடித்துள்ளார்.நடிகர் என்ற அடையாளத்தை தாண்டி, விஜய்யின் நெருங்கிய நண்பராகவும் அரசியல் துணையாகவும் விளங்கிய ஸ்ரீநாத், த.வெ.க. அலை மூலம் தூத்துக்குடியில் வெற்றியை பதிவு செய்தார்.இதற்கிடையில் தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் இணைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரான ஸ்ரீநாத்திற்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநாத், “என் தலைவர்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயல்படுவோம். மீனவர்கள் பாதுகாப்பாகவும், எந்த தடையும் இன்றி தங்கள் தொழிலை முன்னெடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், “முதல் நாளிலிருந்தே என் தலைவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன். கல்லூரி வாழ்க்கை, திரையுலக பயணம், இப்போது அரசியல் பயணம் என எங்கள் உறவு தொடர்ந்து வருகிறது. ஒழுக்கம், நேர்த்தி, நேர்மை, கருணை ஆகிய அவரது பண்புகளை நான் எப்போதும் பின்பற்றுவேன். இறுதி வரை அவருடன் பயணிப்பேன்” என்றும் உருக்கமாக குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

From college cinema now always with Vijay Minister Srinath sensational statement about Tvk leader Vijay What background


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->