வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு: சென்னையில் 3 பேர் சிக்கியதால் பரபரப்பு
Foreign Citizens Caught Voting in Assembly Elections Three Arrested at Chennai Airport
சென்னையில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற மூன்று நபர்கள், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், 2022-ம் ஆண்டு முதல் கனடா நாட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு குடியுரிமை பெற்று பணிபுரிந்து வரும் அவர், தனது சகோதரரின் திருமணத்திற்காக கடந்த மாதம் சென்னை வந்துள்ளார்.
அப்போது, தியாகராய நகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் தனது பழைய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளார். மீண்டும் கனடா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது, அவரது விரலில் இருந்த தேர்தல் மையைக் கண்டு சந்தேகித்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் சட்டவிரோதமாக வாக்களித்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கே.கே.நகர் போலீசார் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதேபோல், ஆஸ்திரேலிய நாட்டு குடியுரிமை பெற்ற விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், மீண்டும் வெளிநாடு செல்ல விமான நிலையம் வந்தபோது பிடிபட்டார். அவர் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்தது தெரியவந்தது. இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இலங்கை நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவரும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்த விவகாரத்தில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு குடியுரிமை பெற்றவுடன் இந்தியக் குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை தானாகவே ரத்தாகிவிடும் நிலையில், இவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்காமல் இந்த விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைமுறைகள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக, திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியமானது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தத் தொகுதி முடிவை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
English Summary
Foreign Citizens Caught Voting in Assembly Elections Three Arrested at Chennai Airport