எடப்பாடி பழனிச்சாமி தோல்வியை சந்திப்பர் - ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!
EX cm OPS condemn to ADMK EPS
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், "அதிமுக என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இது 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தது. அதற்குக் காரணம் தலைமைப் பண்பு மிக்க, ஆளுமை மிக்க எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்தான். தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடியத் தலைவர்களாக விளங்கியவர்கள். இந்தத் தலைமைப் பண்புதான் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது.
அறிவு, அனுபவம், மேலாண்மைத் திறன் மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு. இதற்கு மாறாக செயல்படுபவர் பிறர் பார்வையில் ஏளனத்துக்குரியவராக இருப்பார். ஆணவம், கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களைக் கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள். தலைமைப் பண்புக்கான அறிகுறி துளியும் இல்லாத பழனிசாமியிடம் அதிமுக தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பழனிசாமியை வரவேற்றுவிட்டு, அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது. இது செல்லூர் ராஜுவுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை.
இதேபோன்று, எம்ஜிஆர் காலத்தில் மக்களவைத் துணைத் தலைவராக பதவி வகித்தவரும், ஜெயலலிதா காலத்தில் மத்திய சட்ட அமைச்சராக இருந்தவருமான தம்பிதுரை, பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது, அதைத் தெரிவிக்க அனுமதிக்கவில்லை.
இந்தக் காட்சியும் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது. இது தம்பிதுரைக்கு ஏற்பட்ட இழுக்கு. இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்து பவர்கள் குறிவைக்கப்பட்டு, அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்ற கருத்து கட்சியில் நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
EX cm OPS condemn to ADMK EPS