தை பிறந்தாலும் வழி அல்ல, வலி மட்டும் பிறந்தது: ஓ.பன்னீர்செல்வ அணியில் அதிர்ச்சி...!
Even though month Thai arrived it brought not solution but only pain Shock O Panneerselvam camp
அ.தி.மு.க. வரலாற்றில் அதிகார மாற்றங்கள் எப்போதும் புயலை எழுப்பியிருக்கின்றன. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுகளால் சிதறியதுபோல், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அதே கதை மீண்டும் எழுதப்பட்டது. அவரது உயிர் தோழியான சசிகலா முதல்வராக பதவியேற்கத் தயாரான தருணத்தில், சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதால் அரசியல் மேடை திடீரென காலியானது.

அந்த வெற்றிடத்தை நிரப்பி, எடப்பாடி பழனிசாமி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.அதன்பிறகு, கட்சியின் கட்டுப்பாட்டை ஓ.பன்னீர்செல்வம் கையில் வைத்துக் கொண்டாலும், ஆட்சியின் சக்கரத்தை எடப்பாடி பழனிசாமி திருப்பினார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டாலும், கட்சிக்குள் மறைமுகப் பூசல்கள் அடுக்கடுக்காக கொதித்துக் கொண்டே இருந்தன.
இந்த மறைமுகப் போர், 2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு வெளிப்படையாக வெடித்தது. “எதிர்க்கட்சித் தலைவர் யார்?” என்ற கேள்வி அ.தி.மு.க.வில் பெரும் போராக மாற, எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் போட்டி உருவானது. இறுதியில் வெற்றிக் கம்பம் எடப்பாடிக்கே சென்றது.
அதன்பின் அரசியல் நாடகத்தின் அடுத்த அத்தியாயம் தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் சில முன்னாள் நிர்வாகிகளும் வெளியேறினர்.
இப்போது, 2026 தேர்தல் நெருங்கி வருவதால், ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்கள் அனைவரும் அவரது அடுத்த முடிவை ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் தீர்மானங்களில் தடுமாறிக் கொண்டிருக்க, ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வேறு முகாம்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.
முதலில் ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தார். பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் அடைக்கலம் புகுந்தார். இப்போது, ஒரத்தநாடு எம்.எல்.ஏ. வைத்திலிங்கமும் தனது பதவியைத் துறந்து திமுகவில் சேர்ந்துள்ளார்.
தற்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் மீதமுள்ள ஒரே எம்.எல்.ஏ. அய்யப்பன் மட்டுமே. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், குன்னம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் திமுக முகாமில் சேரத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
இவ்வாறு, ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து முக்கிய முகங்கள் விலகி வருவதால், அவரது அரசியல் பலமும் செல்வாக்கும் நாளுக்கு நாள் கரைந்து வருகிறது.“தை பிறந்தால் வழி பிறக்கும்” என நம்பிக்கையுடன் கூறிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு, இப்போது வழி அல்ல… ‘வலி’ தான் பிறந்திருக்கிறது என, அவரை விட்டு பிரிந்த ஆதரவாளர்களே கசப்புடன் சொல்லி வருகின்றனர்.
English Summary
Even though month Thai arrived it brought not solution but only pain Shock O Panneerselvam camp