இன்று தேர்தல் வைத்தாலும்.. இந்த கூட்டணிக்குதான் வெற்றி! தவெகவுக்கு 3வது இடம்! 2வது இடம் யாருக்கு? கணிப்பில் தகவல்!
Even if the election is held today Information on the prediction
தமிழ்நாட்டில் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், திமுக தலைமையிலான கூட்டணியே மீண்டும் முழு வெற்றியைப் பெறும் என இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இந்த கணிப்பின் படி, திமுக கூட்டணி 45 சதவிகித வாக்குகளைப் பெற்று, மாநிலத்தின் 38 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 33 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், ஆனால் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் இந்த கணிப்பு தெரிவிக்கிறது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) 15 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும், இதன் மூலம் மாநில அரசியலில் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மக்களவைத் தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்குப் பிறகோ கருத்துக்கணிப்புகள் வெளியாகும். ஆனால் இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து நடத்தும் ‘மூட் ஆஃப் தி நேஷன்’ என்ற ஆய்வு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களின் அரசியல் மனநிலையை அறிய இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
இந்த சமீபத்திய கணிப்பில், தற்போதைய சூழலில் மக்களவைத் தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் அபார ஆதிக்கம் செலுத்தும் என கூறப்பட்டுள்ளது. தவெக குறித்து பேசும்போது, இந்தியா டுடே ஆய்வாளர்கள் மற்றும் பிற அரசியல் கணிப்புகள், விஜய் தலைமையிலான இந்த புதிய அரசியல் இயக்கம் வரவிருக்கும் தேர்தல்களில் 15 முதல் 20 சதவிகிதம் வரை வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன. தவெக தரப்பில் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ரகசிய உள் கணிப்புகளில் 30 சதவிகிதம் வரை வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போதைய தேசிய அளவிலான கணிப்பில் அது 15 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை, குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், தவெக பெறும் வாக்குகள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளின் வாக்கு வங்கியிலும் சரிவை ஏற்படுத்தும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி செல்லும் நிலையில், திமுக கூட்டணி வலுவான நிலையில் இருந்தாலும், தவெக மூன்றாவது சக்தியாக உருவெடுத்து வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தேர்தல் அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என இந்த கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.
English Summary
Even if the election is held today Information on the prediction