திமுகவில் உச்சக்கட்ட மோதல்? 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை என்ற ஸ்டாலின் முடிவால் துரைமுருகன் அதிருப்தி
Escalating rift within the DMK Duraimurugan dissatisfied with Stalin decision barring those over 70 from holding the post of District Secretary
2026 சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் புதிய தலைமுறைக்கும் இடையிலான கருத்து வேறுபாடு தற்போது வெளிப்படையாகத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு குழுக்களை அமைத்திருந்தார். தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்ட அந்தக் குழுக்கள் தங்களது அறிக்கைகளை கட்சித் தலைமைக்கு சமர்ப்பித்தன. மாவட்ட அமைப்புகளை மாற்றியமைத்தல், ஒரு சில தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் நிர்வாகத்தைப் பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அதில் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.
ஆனால், பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் உடனடியாக பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாததால், திமுகவுக்குள் இந்த விவகாரம் தொடர்ந்து விவாதமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்டாலின் இல்லத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா, பொன்முடி, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சுமார் 16 மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டாலினின் அரசியல் ஆலோசகர் சபரீசனும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டதாகவும், சென்னையைச் சேர்ந்த அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் திமுக அமைப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஸ்டாலின் விரிவாகப் பேசியதாக தகவல். குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாது என்றும், நிர்வாகப் பணிகளை பரவலாக்கும் வகையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற முறையை கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மாற்றங்களை செயல்படுத்துவதில் தான் உறுதியாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது வேலூர் மாவட்ட அமைப்பு தொடர்பாக துரைமுருகன் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு ஸ்டாலின் கடுமையாக பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் துரைமுருகன் கூட்டத்தில் இருந்து வெளியேற முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து கே.என்.நேரு, ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோர் துரைமுருகனை சமாதானப்படுத்தி மீண்டும் அமர வைத்ததாகவும், சில நிமிடங்கள் கூட்டத்தில் இறுக்கமான சூழல் நிலவியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் கனிமொழி உள்ளிட்டோர் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தைத் தொடர்ந்ததால் நிலைமை மீண்டும் சுமூகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைவிட, ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் இடையே ஏற்பட்டதாக கூறப்படும் வார்த்தை மோதலே தற்போது திமுக முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதன் பின்னணியில், திமுகவுக்குள் மூத்த தலைமுறை மற்றும் புதிய தலைமுறைக்கு இடையிலான அதிகார சமநிலை குறித்த மிகப்பெரிய விவாதம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
நீண்ட காலமாக மாவட்ட அமைப்புகளை கட்டுப்படுத்தி வரும் மூத்த தலைவர்களின் ஆதிக்கத்தை குறைத்து, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் நோக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து தங்களது மாவட்டங்களில் வலுவான அமைப்பை உருவாக்கிய மூத்த தலைவர்களின் அதிகாரத்தை ஒரே நேரத்தில் குறைப்பது அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் திமுகவுக்குள் உள்ளது.
குறிப்பாக 70 வயது என்ற வயது வரம்பு அமல்படுத்தப்பட்டால், பல மூத்த மாவட்டச் செயலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அதேபோல் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டால், தற்போதுள்ள மாவட்ட அமைப்புகள் மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட வேண்டியிருக்கும்.
இதனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவை அமைப்பு ரீதியாக பலப்படுத்த ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள சீர்திருத்தங்கள், கட்சிக்குள் புதிய அதிகார சமன்பாட்டையும் உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கட்சியை பலப்படுத்த மாற்றம் அவசியம்; அதேநேரத்தில் நீண்ட காலமாக கட்சியின் தூண்களாக இருக்கும் மூத்த தலைவர்களை சமாளிப்பதும் அவசியம். இந்த இரண்டையும் ஸ்டாலின் எப்படி சமநிலைப்படுத்தப் போகிறார் என்பதில்தான் திமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அமையப்போகின்றன.
English Summary
Escalating rift within the DMK Duraimurugan dissatisfied with Stalin decision barring those over 70 from holding the post of District Secretary