'பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாவட்ட கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்': இபிஎஸ் வலியுறுத்தல்..!
EPS urges booth committee in-charges to show seriousness in district party work
அதிமுக பூத் கிளை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால், அதற்கென நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் கட்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
'தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப்பகுதிகளில் பூத் கிளை அமைப்புகளை ஏற்படுத்துவதற்காக, மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அப்பணிகள் முழுமையடைந்துள்ளன. இந்நிலையில், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட, தாங்கள் சார்ந்த சட்டப்பேரவை தொகுதிகளில் கட்சிப் பணிகள், தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்.

சென்னை புறநகர், சேலம் மாநகர், கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களில் பூத் கிளை அமைக்கும் பணிகள் இன்னும் நிறைவுபெறாததால், அம்மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் தொடர்ந்து அப்பணிகளை மேற்கொள்வார்கள். பூத் கிளை நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைத்து, தேர்தல் பணிகளை விரைவாக மேற்கொள்ள பயிற்சி அளிக்க தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
EPS urges booth committee in-charges to show seriousness in district party work