சட்ட பேரவையை புறக்கணிக்கும் முடிவில் இபிஎஸ் தரப்பு!
EPS to boycott first day of Assembly
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எம்எல்ஏக்களின் இருக்கையில் மாற்றம் இல்லை என தகவல்!
தற்போதைய அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார், அவரே தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார். அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுடன் அவரது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக இபிஎஸ் தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நியமனம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகரிடம் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக கடிதம் வழங்கப்பட்டது. அதே சமயம் கட்சி பதவி தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என பன்னீர்செல்வம் தரப்பில் இருந்தும் கடிதம் வழங்கப்பட்டது. இது குறித்து சபாநாயகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் பொழுது கடிதம் குறித்து பரிசீலித்து வருவதாக மட்டுமே பதில் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் யார் அமர போகிறார் என்ற பரபரப்பு தமிழக அரசியலில் பற்றி கொண்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இருக்கைகளில் மாற்றமில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் பழனிச்சாமி அருகில் அமர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இத்தகைய முடிவு எடுத்தால் சட்டப்பேரவையை புறக்கணிக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இன்றைய தினத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் இரங்கல் செய்தி வாசிப்பு மட்டுமே நடைபெறும் என்பதாலும் அதிமுகவின் பொன்விழா ஆண்டு விழா நடைபெற உள்ளதாலும் இத்தகைய முடிவு எடுக்கலாம் என பேசப்படுகிறது. இன்று நடைபெறும் சபாநாயகர் தலைமையிலான சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பற்றிய பிரச்சினையை எழுப்ப பழனிச்சாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
English Summary
EPS to boycott first day of Assembly