திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் அவலம்.. இ.பி.எஸ் குற்றசாட்டு.!! - Seithipunal
Seithipunal


விடியா ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் அவலம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  குற்றசாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜி ஸ்கொயர்' என்கிற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ஒரு தனிநபர் மீது 21.05.2022 அன்று இரவு 9 மணிக்கு சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது. மேலும், இந்தப் புகாரில் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவர் பெயரையும் மற்றும் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல், வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பது, இதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகிறது. ஜூனியர் விகடன் பெயரையோ அல்லது சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் ஆகியோரது பெயர்களைக் கூறி ‘ஜி ஸ்கொயர்' நிறுவனத்தை யாராவது மிரட்டி இருந்தால், அந்நிறுவனத்தினர் விகடன் நிறுவனத்தையோ அல்லது அதில் உள்ள இரண்டு நபர்களையோ அணுகி தெளிவு பெற்றிருக்கலாம். அது உண்மையா என்றும் விசாரித்திருக்கலாம். ஆனால், காவல் துறையில் ‘ஜி ஸ்கொயர்' புகார் அளிப்பதும், இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே கருத வேண்டி உள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் 3-ஆவது குற்றவாளியாக “ஜூனியர் விகடனோடு சம்பந்தப்பட்டவர்கள்” என்பது, விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுனர் வரை அனைவரையும் கைது செய்ய, காவல் துறைக்கு உரிமை வழங்கி உள்ளது. 

இந்த பொய் புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்திற்கு உரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பத்திரிக்கை சுதந்திரம், கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பற்றியெல்லாம் வாய்கிழியப் பேசிய இன்றைய ஆட்சியாளர்கள், அதிகார மமதையின் உச்சத்திற்கே சென்றுள்ளார்கள். அனைத்து செய்தி ஊடகங்களும் கைகட்டி, வாய்பொத்தி, தங்களுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும் என்று இந்த அரசு எதிர்பார்க்கிறது. தாங்கள் செய்யும் தவறுகளை எந்த ஒரு ஊடகமும் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவல் துறைக்கு இந்த அரசு உத்தரவிட்டது போல் தெரிகிறது.

பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசும் திமுக-வின் அரசியல் கூட்டாளிகள், ஒருசில சமூக வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர் சங்கங்கள், பத்திரிகை சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைத் தாங்களே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒருசில ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள், ஒருசில செய்தி ஊடகங்கள் என அனைத்தும் இந்த விடியா அரசின் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கைகளை வாய்மூடி, கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்ப்பதை பார்க்கும் போது;

"நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்” என்ற பாரதியாரின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

தங்களுக்கு வெண்சாமரம் வீசும் காட்சி ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற மமதையை இந்த அரசு விட்டொழிக்க வேண்டும்.

காவல் துறை அதிகாரிகள் தங்களிடம் கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்து, உண்மைத் தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, திமுக-விற்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால், வழக்குப் பதிவு செய்த உடனே கைது செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு தமிழக மக்கள் விரைவில் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்று எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS Statement on may 23


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->