வண்டலூர் பள்ளி மாணவி வழக்கு: "பாயாச-பாசிச அரசு" என தவெக அரசைச் சாடிய எடப்பாடி பழனிசாமி!
EPS Slams TVK Govt TN Police Over Alleged Vandalur Schoolgirl Harassment Case
சென்னை வண்டலூர் அருகே உள்ள அரசுப் பள்ளிக்குள் மர்ம நபர்கள் புகுந்து மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (X) தளத்தில் தவெக அரசு மற்றும் காவல்துறையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காவல்துறையின் நடவடிக்கைக்குக் கண்டனம்:
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ள நிலையிலும், வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டிய காவல்துறை, செய்தி வெளியிட்ட ஊடகங்களை அச்செய்தியை நீக்குமாறு சமூக வலைதளங்களில் "போலி செய்தி" (False News) எனப் பதிவிட்டு முந்திக்கொண்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அரசுப் பள்ளிகளே பாதுகாப்பற்ற இடமாக மாறி மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கும் நிலையில், குற்றத்தை விசாரிக்காமல் செய்தியை மறைக்க முயல்வது வெட்கக்கேடானது என்று அவர் சாடினார்.
முதலமைச்சர் விஜய் மீது பாயும் விமர்சனம்:
தமிழகத்தில் விஜய் ஆட்சியில் காவல்துறையினருக்குச் செய்திகளை மிரட்டி அடக்கும் "ரூட் மாபியா" பாணியைக் கடைப்பிடிக்க உத்தரவுகள் ஏதேனும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, "உயர் மட்ட வழக்குகளுக்கு ஒரு சட்டமும், சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமுமா?" என்று சீறினார். தாம் விஜய்யை "காஸ்ட்லி முதலமைச்சர்" (Costly CM) என்று குறிப்பிட்டதற்கு இந்தச் சார்புநிலை மனோபாவமே காரணம் என்றும், தற்போதைய அரசின் செயல்பாடுகள் அதை மெய்ப்பிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
"பாயாச-பாசிச அரசு" எனக் கண்டனம்:
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவிதத் தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்காமல், பாலியல் புகார்களை மூடி மறைக்கவும் செய்திகளையே வரவிடாமல் ஊடகங்களை மிரட்டவும் செய்யும் இந்தத் தவெக அரசை "பாயாச-பாசிச அரசு" எனக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், வண்டலூர் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவர் மீதும் உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
EPS Slams TVK Govt TN Police Over Alleged Vandalur Schoolgirl Harassment Case