வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால் பதட்டப்பட வேண்டாம்; பெயர் நிச்சயம் இணைக்கப்படும் என்கிறார் இபிஎஸ்..!
EPS says theres no need to panic if your name is missing from the draft voter list
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முடிந்து, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ''வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால் வாக்காளர்கள் பதட்டப்பட வேண்டாம்,'' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முடிந்து, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த எஸ்ஐஆர் தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.

எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது.
வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு இருந்தால், பதட்டப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தின் படிவம்-6, அல்லது தாங்கள் இடம் மாறி இருந்து அதனால் வாக்கு நீக்கப்பட்டிருப்பின் படிவம்- 8 நிரப்பி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகளுள் ஒன்றோடு சமர்ப்பித்தால், தங்களின் பெயர் நிச்சயமாக இணைக்கப்படும்.
இதற்கு உங்களுக்கு நம் அதிமுக ஓட்டுச்சாவடி பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். முதல்வரும், அவர் தலைமையிலான திமுக-வும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் ஓட்டு பறிபோனது போல சித்தரிக்கப் பார்ப்பார்கள். அவர்களின் சதிவலையில் யாரும் விழவேண்டாம். ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, அதிமுக இருக்கும் வரை உருவாகாது.
அதிமுகவினருக்கு இப்போது தான் நமக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது. ஒவ்வொரு பூத் வாரியாக பழைய வாக்காளர் பட்டியலோடு, வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, வரைவு பட்டியலில் உள்ள வாக்காளர்கள் சரியான காரணத்திற்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சரியான காரணம் இன்றி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தால், அவர்களின் இல்லத்திற்கே சென்று, அவர்களுக்கு படிவம்-6 / படிவம்-8 நிரப்பி, BLO-விடம் வழங்கி அவர்களின் வாக்குகள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது நம்முடைய தலையாயக் கடமை.
அதேபோல், போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதனை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டு, அவை நீக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.'' என்று அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.
English Summary
EPS says theres no need to panic if your name is missing from the draft voter list