கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணை வளையத்தில் மின்வாரிய அதிகாரிகள்!
Electricity Board officials CBI Karur case
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ (CBI) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர். அத்துடன், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரண் உள்ளிட்ட சிலரிடமும் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாகவே கூட்ட நெரிசல் அதிகரித்து, பலர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில், மின்வாரியத் துறை அதிகாரிகளுக்குச் சிபிஐ தரப்பில் ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை, இந்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்தியப் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரீட்டைச் (Power Grid) சேர்ந்த சென்னை அதிகாரிகள் இருவர், கரூரில் சிபிஐ அதிகாரிகள் தங்கி விசாரணை மேற்கொள்ளும் பொதுப்பணித்துறை அலுவலக சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தனர். தற்போது அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Electricity Board officials CBI Karur case