'கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை பெற முயற்சிக்கவும்'; தமிழக முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


''காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களை தமிழக அமைச்சரவையில் சேர்த்து, அவர்களுக்கொரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த த.வெ.க. தலைவர், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மேகேதாட்டுவில் அணைகட்டுவதை தடுத்து நிறுத்தவும், தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை பெறவும் முயற்சிக்குமாறு த.வெ.க. அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்'' என தவெக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''காவிரி நதிநீர் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா உள்ளிட்ட பத்து மாவட்டங்களின் விவசாயத்திற்கு ஜீவாதாரமாகவும் விளங்குகிறது.

பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு எனது தலைமையிலான அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. 

தொடர்ந்து, 1.6.2018 அன்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத்தை மத்திய அரசு அறிவித்து, அதனை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது. இந்த ஆணையத்தின் பணிகளும், குழுவின் பணிகளும் முறையாக கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளன.

1. காவிரி நதிநீரைத் தேக்குதல், பகிர்மானம் செய்தல், முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல்;

2. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் துணையுடன் அணைகளின் செயல்பாட்டை மேற்பார்வையிடுதல் மற்றும் அவற்றில் இருந்து நீரை, பாசனம் மற்றும் இதர தேவைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்துதல்;

3. கர்நாடகம் - தமிழ் நாடு எல்லையில் பிலிகுண்டுலு நீர் அளவை நிலையத்தில் கர்நாடக அரசு நீர் வழங்குதலைக் கண்காணிப்பது.

இவற்றைத் தவிர வேறு பணிகள் எதுவும் மேற்கொள்ள இந்த அமைப்புகளுக்கு அதிகாரம் இல்லை.

இந்நிலையில், கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக பதவி வகித்தபோது, துணை முதல்வராகவும், நீர்பாசனத் துறைக்கு பொறுப்பு வகித்த, தற்போதைய முதல்வர் டி.கே.சிவகுமார், துணை முதல்வராக பொறுப்பேற்ற காலந்தொட்டே மேகேதாட்டுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியதோடு, இந்த திட்டத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்தார்.

கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட, தயாரித்து அனுப்பிய திட்ட அறிக்கையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி, மத்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், மத்திய அரசு குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து 12.6.2026 அன்று கர்நாடக முதல்வர் சுற்றுச் சூழல் அனுமதியைப் பெற, பிரதமரிடம் மீண்டும் நேரில் ஒரு அறிக்கையை வழங்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவிரி நதிநீர் தீர்ப்பாயம் தனது 2007-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், காவிரி நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ உரிமை கிடையாது என்றும், கட்டமைப்புகள் ஏதேனும் மேற்கொள்ள வேண்டுமெனில், நதிநீர் பாயும் கீழ் மாநிலங்களின் ஒப்புதலோடு தான் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

எனவே, காவிரி நீரை பயன்படுத்தும் கீழ்தட்டு மாநிலங்களான தமிழ் நாடு, கேரளம், புதுச்சேரி ஆகியவைகளின் ஒப்புதல் இன்றி காவிரியின் குறுக்கே எவ்வித கட்டுமானத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே, கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து, தமிழ் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கும், மேகேதாட்டுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எள் முனையளவுகூட இடம் அளிக்காமல், தமிழ் நாட்டின் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாகத் தொடர்ந்து எடுக்க வேண்டுமென்று தமிழ் நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை, சென்ற மாதம் டெல்லியில் நடைபெற்ற 51-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் அழுத்தம் தந்து, உரிய நீரைப் பெற்றிருக்க வேண்டும். 

அவ்வாறு தமிழகத்தின் பங்கு நீரைப் பெறாததால், மேட்டூர் அணையில் இருந்து இவ்வாண்டு ஜூன் 12 அன்று டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தாமலும் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமலும், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமலும், மேட்டூர் அணைக்கு வரவேண்டிய நீரை கர்நாடக காங்கிரஸ் அரசிடமிருந்து கேட்டுப் பெறாமலும், முதல் கோணல், முற்றும் கோணல் என்பதுபோல் ஆட்சியின் துவக்கத்திலேயே டெல்டா மாவட்ட விவசாயிகளை ஏமாற்றத்திற்கும், துன்பத்திற்கும் த.வெ.க. அரசு உள்ளாக்கியுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களை தமிழக அமைச்சரவையில் சேர்த்து, அவர்களுக்கொரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த த.வெ.க. தலைவர், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மேகேதாட்டுவில் அணைகட்டுவதை தடுத்து நிறுத்தவும், தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை பெறவும் முயற்சிக்குமாறு த.வெ.க. அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami urges the Tamil Nadu Chief Minister to exert pressure on the Karnataka Congress government and secure Tamil Nadu due share of water


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->