சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை; சிபிசிஐட விசாரணைக்கு வலியுறுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி..!
Marxist demands a CBCID probe into the case involving the sexual assault of over 50 women in Salem
''சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தும், அதை வைத்தே மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
''சேலம் மாநகரப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை மணிகண்டன் என்பவர் ஆபாசமாக வீடியோ எடுத்தும், அதை வைத்தே மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் அப்பெண்களை பாலியல் வணிகத்தில் உள்ளாக்கியுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடுஞ்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் மணிகண்டன் பெண்களை மிரட்டி பாலியல் வணிகத்தில் தள்ளியுள்ளதால் இதன் பின்புலமாக மேலும் பலர் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவதோடு, அவர்கள் குறித்த தகவல்களை கசியவிடாமல் பாதுகாக்கவும், இன்னும் வேறு யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.
குற்றம்சாட்டப்பட்ட நபர் தவெக கட்சியை சேர்ந்தவர் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. அது உண்மையாக இருப்பின் அவரை கட்சியிலிருந்து நீக்குவதுடன் எவ்வித அரசியல் அழுத்தமுமின்றி விசாரணை நேர்மையாக நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Marxist demands a CBCID probe into the case involving the sexual assault of over 50 women in Salem