அடுத்தடுத்து பறிபோன இரண்டு உயிர்கள்.. வேதனையில் எடப்பாடி பழனிசாமி.!! - Seithipunal
Seithipunal


மாணவ செல்வங்களே.. பெற்றோர்களே.. முடிவு கட்டுவோம் நீட் இழப்புகளுக்கு என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம்‌ இரண்டு மாணவச்‌ செல்வங்கள்‌ நீட்‌ காரணமாக தங்கள்‌ இன்னுயிரை மாய்த்துக்‌ கொண்டனர்‌ என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்‌.

முதலாவது நிகழ்வில்‌ நீலகிரி மாவட்டம்‌, கூடலூரை அடுத்துள்ள ஒவேலி பேரூராட்சி, பாரதி நகரில்‌ வசிக்கும்‌ திரு. அருளானந்தம்‌ - திருமதி புஷ்பா தம்பதியினரின்‌ இரண்டாவது மகள்‌ ஜெயா நீட்‌ நுழைவுத்‌ தேர்வில்‌ குறைந்த மதிப்பெண்‌ பெற்றதால்‌, தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்‌. பாச மகள்‌ ஜெயாவை இழந்து வாடும்‌ அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும்‌, இரங்கலையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

மற்றொரு நிகழ்வில்‌ தஞ்சாவூர்‌ மாவட்டம்‌, பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சியைச்‌ சேர்ந்த திரு. வெள்ளைச்சாமி - திருமதி நாகூர்மாலா ஆகியோரது அன்பு மகள்‌ துளசி 2020-ம்‌ ஆண்டு நீட்‌ நுழைவுத்‌ தேர்வு எழுதி, மருத்துவர்‌ படிப்பிற்கு தேர்வாகாததால்‌, இந்த ஆண்டு தனியார்‌ பள்ளியில்‌ உள்ள நீட்‌ பயிற்சி மையத்தில்‌ சேர்ந்து நுழைவுத்‌ தேர்விற்கு பயிற்சி பெற்று வந்ததாகவும்‌, ஆனால்‌, இந்த முறையும்‌ மருத்துவராகும்‌ வாய்ப்பு கிடைக்கப்‌ பெறாததால்‌, பொறியியல்‌ அல்லது வேளாண்மைப்‌ படிப்பில்‌ சேருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டதாகவும்‌, ஆனால்‌, அவர்‌ நீட்‌ நுழைவுத்‌ தேர்வுக்குப்‌ பயின்ற தனியார்‌ பயிற்சி மையம்‌ ரூ. 40 ஆயிரம்‌ பயிற்சி நிலுவைத்‌ தொகையை செலுத்தினால்தான்‌ சான்றிதழ்களை தருவோம்‌ என்று கூறியதாகவும்‌, அப்பணத்தைக்‌ கட்ட இயலாததால்‌ தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்‌. நீட்‌ நுழைவுத்‌ தேர்வில்‌ குறைந்த மதிப்பெண்‌ பெற்றதால்‌, மருத்துவப்‌ படிப்பில்‌ சேர இயலாத நிலையில்‌, பொறியியல்‌ அல்லது வேளாண்மைப்‌ படிப்பில்‌ சேர மாணவி துளசி முடிவு செய்துள்ளார்‌. ஆனால்‌, தனியார்‌ பயிற்சி நிறுவனம்‌ சான்றிதழ்களை தர மறுத்ததால்‌, மற்ற படிப்புகளிலும்‌ சேர இயலவில்லை என்ற நிலையில்‌ மாணவி துளசி மிகுந்த மன உளைச்சலில்‌ தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்‌ என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்‌. பாசமிகு மகளை இழந்து வாடும்‌ அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும்‌, இரங்கலையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

மருத்துவப்‌ படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை, குறைந்தபட்சம்‌ 40-க்கும்‌ மேற்பட்ட மருத்துவம்‌ சம்பந்தப்பட்ட பல இணைப்‌ படிப்புகள்‌ உள்ளன என்றும்‌, எனவே, நீட்‌ நுழைவுத்‌ தேர்வில்‌ குறைந்த மதிப்பெண்‌ பெற்றுவிட்டோம்‌ என்ற மன உளைச்சலில்‌
மாணவச்‌ செல்வங்கள்‌ தங்களது இன்னுயிரை இழக்க வேண்டாம்‌ என்றும்‌ நான்‌ ஏற்கெனவே எனது முந்தைய அறிக்கையில்‌ அன்புடன்‌ கேட்டுக்கொண்டிருந்தேன்‌.

மாணவச்‌ செல்வங்களாகிய நீங்கள்‌ எந்த முடிவையும்‌ அவசரப்பட்டு எடுக்காதீர்கள்‌. உலகம்‌ மிகவும்‌ பெரியது. அன்பான தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையும்‌ இழந்தவர்கள்‌, பொருளாதார ரீதியில்‌ துன்பப்படுபவர்கள்‌ என்று பல்வேறு வகைகளில்‌ தினசரி வாழ்வில்‌ உங்களைவிட பலமடங்கு மிகவும்‌ துன்பத்தை அனுபவிப்பவர்கள்‌ மிகுந்த மன வலிமையுடன்‌, தங்களுக்குள்ள குறைகளையே வெளியில்‌ சொல்லாமல்‌, வாழ்க்கைப்‌ போராட்டத்தில்‌ வெற்றிபெற்று உயர்ந்த நிலையை அடைந்தவர்களை மாணவச்‌ செல்வங்களாகிய நீங்கள்‌ முன்‌ உதாரணமாகக்‌ கொள்ளவேண்டும்‌. அவர்களைப்‌ பற்றிய வாழ்க்கை வாலாற்றைப்‌ படித்து, நீங்கள்‌ மனஉறுதி கொள்ளவேண்டும்‌, அவர்களைப்‌ போல்‌ வாழ்வில்‌ முன்னேற வேண்டும்‌ என்று உங்கள்‌ அனைவரையும்‌ அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

அம்மாவின்‌ அரசு அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்ற ஏழை எளிய மாணவர்கள்‌ மருத்துவக்‌ கனவை நனவாக்கும்‌ வகையில்‌ 7.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. உள்‌ ஒதுக்கீட்டின்படி மருத்துவம்‌ படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்‌ வழங்கும்‌ நிகழ்ச்சியில்‌ ஒரு மாணவியின்‌ தந்தை பேசியபோது, இனி தனது குடும்பத்தினரை, தான்‌ வசிக்கும்‌ பகுதி மக்கள்‌ இனி டாக்டர்‌ குடும்பம்‌ என்று பெருமையுடன்‌ அழைப்பார்கள்‌ என்று நெகிழ்ச்சியுடன்‌ பேசியதை இங்கு நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்‌.

தி.மு.க. தேர்தலின்‌ போதும்‌, பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபோதும்‌, வாய்‌ புளித்ததோ, மாங்காய்‌ புளித்ததோ என்று உண்மையான சூழலை மாணவர்களிடம்‌ தெரிவிக்காமல்‌, நீட்‌ நுழைவுத்‌ தேர்வு ரத்து செய்யப்படும்‌ என்று மீண்டும்‌ மீண்டும்‌ நுழைவுத்‌ தேர்வினை அரசியலாக்கியதே மாணவச்‌ செல்வங்களின்‌ மன உளைச்சலுக்கு காரணம்‌. இனியாவது மாணவச்‌ செல்வங்களிடம்‌ உண்மையான நிலைமையை எடுத்துக்கூறி, நீட்‌ நுழைவுத்‌ தேர்வை ரத்து செய்யும்‌ வரை, நீட்‌ நுழைவுத்‌ தேர்வுக்கான சிறப்புப்‌ பயிற்சியினை உடனடியாக துவங்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்‌ என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

edappadi palanismay says about neet death


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->