"குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அள்ளிச் சென்றது போல் அதிமுக எம்.எல்.ஏ-க்களை இழுத்த தவெக": எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Edappadi K Palaniswami Slams TVK Over MLA Poaching and Governance Failure at Trichy Event
திருச்சியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகளையும் ஆட்சியமைப்பையும் கடுமையாகச் சாடியுள்ளார்.
மிட்டாய் கொடுத்து இழுத்த தவெக: தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அள்ளிச் செல்வது போல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தவெக இழுத்துக் கொண்டதால் தான் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது.
இரவல் காலில் நிற்கும் ஆட்சி: அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் உழைப்பால் வெற்றி பெற்ற இரு எம்.எல்.ஏ-க்களையும் ஆட்சியைத் தக்கவைப்பதற்காகக் குதிரைப் பேரத்திற்குப் பலியாக்கி ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். தவெக அரசு சொந்தக் காலில் நிற்காமல் இரவல் காலில் நிற்கிறது; கூட்டணிக் கட்சிகள் விலகிக் கொண்டால் ஆட்சி உடனடியாகக் கவிழ்ந்துவிடும்.
'ரீல்ஸ்' மட்டுமே விடும் அரசு: ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்கள் கடந்த நிலையிலும் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு எதுவும் செய்யாமல் வெறும் 'ரீல்ஸ்' விட்டே காலத்தைக் கழித்து வருகின்றனர். முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றதாகக் கூறி பத்திரிகைகளில் புகைப்படங்கள் மட்டுமே வருகின்றனவே தவிர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வு: 2011-ல் அதிமுக ஆட்சியில் பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியதுடன் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியில் தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்தடை, மின்கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு நிலவுகிறது.
விவசாயிகளின் சாபம் எதிரொலிக்கும்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம், காவிரி நீர் உரிமை மீட்பு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் நேரடி நெல் கொள்முதல் மூலம் விவசாயிகளைக் காத்த ஒரே கட்சி அதிமுகதான். டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் நெல் மழையில் நனைந்து வீணாவதைக் கண்டித்துக் குறு, சிறு விவசாயிகள் போராடி வருகின்றனர்; விவசாயிகளின் சாபம் வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
English Summary
Edappadi K Palaniswami Slams TVK Over MLA Poaching and Governance Failure at Trichy Event