தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாநிலக் கட்சி அந்தஸ்து: இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ ஆணை! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்குத் (தவெக) 'அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சி' என்ற அதிகாரப்பூர்வ அந்தஸ்தை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கி உறுதி செய்துள்ளது. இத்துடன், அக்கட்சியின் தேர்தல் சின்னமான 'விசில்' சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முழுமையாக உறுதிப்படுத்தி நிரந்தர ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், 'விசில்' சின்னத்தில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுடன், விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வருகிறார்.

ஒரு கட்சி மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்குத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தேவையான வாக்கு சதவீதம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகிய தகுதிகளைத் தவெக வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து, இந்த அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் இதுவரை ஆறு ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை தற்போது ஏழாக (7) உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), நாம் தமிழர் கட்சி மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) ஆகிய ஆறு கட்சிகள் மாநில அங்கீகாரம் பெற்றிருந்த நிலையில், அந்தப் பெருமைமிகு பட்டியலில் ஏழாவது கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பினால், வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களுக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவது முற்றிலும் உறுதியாகியுள்ளது. கட்சி தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே மாநிலக் கட்சி அந்தஸ்தும் நிரந்தரச் சின்னமும் கிடைத்திருப்பது தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ECI Grants Recognized State Party Status to TVK Reserves Whistle Symbol


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->