கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாதா மிஸ்டர் ஸ்டாலின்? நீதிமன்றத்தில் போராட தயார் ஆகிறது அறப்போர்!
DVAC Files Closure Report in 28 Crore Graft Case Against Former Minister Vaithilingam dmk
அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ஆர். வைத்திலிங்கத்திற்கு எதிரான மிக முக்கிய ஊழல் வழக்கு ஒன்றில், தற்பொழுது திடீர் திருப்பமாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்கை முடித்து வைத்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி மற்றும் லஞ்சப் புகார்
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக வைத்திலிங்கம் பதவி வகித்தார். அந்தச் சமயத்தில், சென்னை பெருங்களத்தூரில் உள்ள 'ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ்' (Sriram Properties) அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட திட்டத்திற்கு கட்டுமான அனுமதி வழங்குவதற்காக, அவர் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாகப் பலத்த சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாகச் சமூக நல அமைப்பான அறப்போர் இயக்கம் கடந்த 2022-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விரிவான புகாரை அளித்தது. எனினும், இரண்டு ஆண்டுகள் நீண்ட தாமதத்திற்குப் பிறகு, கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் இந்த புகாரின் அடிப்படையில் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முறைப்படி வழக்குப்பதிவு (FIR) செய்தது.
ஆதாரங்கள் இல்லை: லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் முடிவில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான "போதிய சான்றுகளோ அல்லது தகுந்த ஆவண ஆதாரங்களோ கிடைக்கவில்லை" என்று லஞ்ச ஒழிப்புத்துறை தற்பொழுது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த வழக்கை மேற்கொண்டு நடத்தத் தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைப்பதற்கான (Closure Report) அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நகர்வு: லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ள இந்த அதிரடி இறுதி அறிக்கை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு வரும் ஜூன் 12-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த மூடுவிழா அறிக்கையை நீதிமன்றம் ஏற்குமா அல்லது புகார்தாரரான அறப்போர் இயக்கத்தின் ஆட்சேபனைகளைக் கேட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுமா என்பது அன்றைய தினம் நீதிபதியின் முடிவில்தான் தெரியவரும்.
இந்த விவகாரம் குறித்து அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அவரை திமுகவில் இணைத்து அதற்கு அடுத்த மாதமே அந்த FIRஐ ரத்து செய்து அவரை திமுக MLA ஆக்கிய திமுக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்று வரலாறு பேசும்.
கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாதா மிஸ்டர் ஸ்டாலின்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
DVAC Files Closure Report in 28 Crore Graft Case Against Former Minister Vaithilingam dmk