#BREAKING || மிக மிக அவசரம்., சற்றுமுன் பிரதமர் மோடிக்கு மருத்துவர் இராமதாஸ் பரபரப்பு கடிதம்.! - Seithipunal
Seithipunal


எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைந்து விட்ட நிலையில், ஒன்பதாவது ஆணையத்தை கூடுதல்  அதிகாரங்களுடன் உடனடியாக அமைக்க வேண்டும் என்று, இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடி அவர்களை,  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

இது தொடர்பாக பிரதமருக்கு மருத்துவர் இராமதாஸ் அவர்கள் எழுதிய கடிதத்தின் விவரம் பின்வருமாறு :

"இந்தியாவின் சமூகநீதி வரலாற்றின் அத்தியாயங்களில் தொடர்ந்து பயணிக்கும் அமைப்பு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதியையும், சம வாய்ப்பையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆகும். குறிப்பாக எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அதற்கு முந்தைய ஆணையங்களுக்கு இல்லாத பல்வேறு சிறப்புகள் உண்டு.

இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கான்பதற்காகவும், அவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை பரிந்துரைப்பதற்காகவும் 29.01.1953 அன்று காகா கலேல்கர் ஆணையமும், அதன் பின்னர் 01.01.1979 அன்று மண்டல் ஆணையமும் அமைக்கப்பட்டன. இந்த இரு ஆணையங்களும் குறிப்பிட்ட தேவைகளுக்காக அமைக்கப்பட்ட நிலையில், இந்திரா சகானி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாக்கும் வகையில், நிலையான அமைப்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்; அதற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. அதன்படி 1993&ஆம் ஆண்டில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட்டம் இயற்றப்பட்டு, அதனடிப்படையில் 18.08.1993 முதல் 16.09.2016 வரை மொத்தம் 7 ஆணையங்கள் செயல்பாட்டில் இருந்துள்ளன. அவை அனைத்தும் சட்டப்பூர்வ அமைப்புகளாக இருந்தனவே தவிர அரசியல் சாசன அமைப்புகளாக செயல்படவில்லை.

இந்திய நாட்டின் பிரதமராக தங்கள் பொறுப்பேற்ற பிறகு 2018&ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 102-ஆவது திருத்தத்தை செய்த பிறகு 11.08.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசிதழின் அடிப்படையில் தான் தேசிய பிற்படுத்தப்படோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. அத்தகைய அதிகாரத்துடன் எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்  28.02.2019 அன்று அமைக்கப்பட்டது. இது எட்டாவது ஆணையத்தின் தனிப்பெரும் சிறப்பு ஆகும். ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கியதற்காக தங்களுக்கு நாடு முழுவதும்  உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள்.

எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் திரு. பகவான் லால் சாஹ்னி,  உறுப்பினர்கள் ஆச்சாரி தல்லாஜ், சுதா யாதவ், கவுஷலேந்திரசிங் படேல் ஆகியோரின் பதவிக்காலம்  27.02.2022 அன்றும், துணைத் தலைவர் டாக்டர். லோகேஷ் குமார் பிரஜாபதியின் பதவிக்காலம் 08.03.2019 அன்றும் முடிவுக்கு வந்து விட்டன. அதனால், எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த மார்ச் 8-ஆம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. அதன்பின்னர் 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய ஆணையம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதற்காக ஆயத்தப் பணிகள் கூட தொடங்கப்படவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இந்தியாவில் 70 கோடிக்கும் கூடுதலான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உண்டு. இந்த ஆணையத்தின் முக்கியத்துவம் குறித்து தாங்கள் பலமுறை வலியுறுத்தியிருக்கிறீர்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆணையம் செயல்பாட்டில் இல்லை என்றால் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படாது என்பதை தாங்கள் அறிவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

* ஓபிசி இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக கிரீமிலேயர் வரம்பு இப்போது ரூ.8 லட்சமாக உள்ளது. இந்த வரம்பு 2020-ஆம் ஆண்டே உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். இப்போது இந்த வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும்.

* பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் ஒபிசி இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட வில்லை என்ற குற்றச்சாட்டுகள் குறித்த ஆணையத்தின் விசாரணை நிலுவையில் உள்ளது.

* ஓபிசி உள் இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ரோகிணி ஆணையம், அதன் முடிவுகளை இறுதி செய்வதற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உதவியும், வழிகாட்டுதலும் தேவை.

இவ்வாறாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணிகள் மிகவும் முக்கியமாக தேவைப்படும் சூழலில், ஆணையம் காலாவதியாகிருப்பது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நன்மை பயக்காது.

அதுமட்டுமின்றி, 2019-ஆம் ஆண்டு வரை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர்  பதவி மத்திய கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானதாக இருந்தது. இப்போது அப்பதவி மத்திய அரசு செயலாளர் நிலைக்கு குறைக்கப்பட்டிருப்பதால் ஆணையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையை மாற்றியமைக்கவும் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதி...

1. ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.

2. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கு கேபினட் அமைச்சருக்கு இணையான  தகுதி வழங்க வேண்டும்.

3. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் 60% பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அவற்றை நிரப்ப வேண்டும்.

4. நாடு முழுவதும் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட மக்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை எளிதில் அணுக வசதியாக சென்னை, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில்  ஆணையத்தின் மண்டல அலுவலகங்களைத் திறக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அந்த கடிதத்தில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DrRamadoss letter to PMModi For OBC issue


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->