திராவிட மாடல் தொடரும்... மோடியின் செல்வாக்கு சரியும்! - 2026 தேர்தல் களம் குறித்து வைகோவின் அதிரடி கணிப்பு
Dravidian model continue Modi influence decline Vaiko sensational prediction regarding 2026 election landscape
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய பட்ஜெட் மற்றும் தமிழக அரசியல் களம் குறித்துத் தனது அதிரடி கருத்துகளைப் பதிவு செய்தார்.
"நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2026-2027 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு பெரும் ஏமாற்றத்தையே மிச்சப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை மையப்படுத்தி, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு மற்றும் மக்கள் நலத் திட்டங்களில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என நம்பினோம்; ஆனால் அந்த நம்பிக்கை இப்போது சுக்குநூறாக உடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 டாலர்களாகச் சரிந்துள்ள நிலையிலும், பெட்ரோல்-டீசல் விலையைக் குறைக்காமல் பிடிவாதம் காட்டுவது சாமானிய மக்களின் முதுகெலும்பை உடைக்கும் செயலாகும். சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டப்போவதாகக் கூறுவது வெறும் கற்பனை கோட்டையேத் தவிர நடைமுறைக்குச் சாத்தியமற்றது.
இது நாட்டின் எதிர்கால நிதியாதாரத்திற்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கையாகும்.கொங்கு மண்டலத்தின் வாழ்வாதாரமான கோவை மற்றும் ஈரோடு மாவட்ட நூற்பாலைகளுக்கும், ஜவுளித் தொழிலுக்கும் எந்தவொரு சிறப்பு ஊக்கத்தொகையும் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல், தமிழகத்தின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு காட்டியுள்ள மெத்தனப்போக்கு வருத்தமளிக்கிறது. இருப்பினும், சுங்கவரியைக் குறைத்துள்ள நடவடிக்கை மட்டும் ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கிறது.
அரசியலைப் பொறுத்தவரை, ம.தி.மு.க ஒருபோதும் அதிகாரப் பசிக்காகக் கூட்டணி வைப்பதில்லை. வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வாகை சூடும்; திராவிட மாடல் ஆட்சி தடையின்றித் தொடரும். மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களே முதலமைச்சர் பீடத்தில் அமர்வார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.பிரதமர் மோடியின் செல்வாக்கு தேசிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது.
தொகுதிகள் பங்கீடு குறித்து இப்போதே பேச முடியாது; பேச்சுவார்த்தைக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறேன்" என வைகோ முழங்கினார்.
இந்தச் சந்திப்பின்போது மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராஜ், உயர்மட்டக் குழு உறுப்பினர் மோகன்ராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
English Summary
Dravidian model continue Modi influence decline Vaiko sensational prediction regarding 2026 election landscape