பிற்படுத்தப்பட்டோருக்கு உச்சநீதிமன்ற பணி நியமனத்தில் இடஒதுக்கீடு: திராவிட கழக தலைவர் கி.வீரமணி நன்றி தெரிவிப்பு..!
Dravida Kazhagam leader K Veeramani expresses gratitude for providing reservation in Supreme Court appointments to backward classes
உச்சநீதிமன்ற பணி நியமனத்தில் பிற்படுத்தப் பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
“உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு! நமது பாராட்டும், நன்றியும்!
உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆணை பிறப்பித்ததை வரவேற்று நேற்று (4.7.2025) ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டிருந்தோம்.
OBC என்ற பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு விரிவுப்படுத்த வேண்டியது அவசரம், அவசியம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். நமது கோரிக்கைக்கு செவி சாய்த்ததுபோல் இன்று (5.7.2025)) காலை அந்த நல்ல செய்தி வெளிவந்துவிட்டது. ‘பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்ற ஆணையை உச்சநீதிமன்றம் பிறப்பித்துவிட்டது. சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாக இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
-x64r7.png)
மாற்றுத் திறனாளிகள், மேனாள் ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற மேலதிகாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கான 1961 ஆண்டின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பணி சார்ந்த விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் சார்ந்த விவரங்கள் அடங்கிய பட்டியலில் முறைப்படி திருத்தம் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜூலை 3 ஆம் நாள் கையொப்பமிட்டு விதி எண்.4A–வில் திருத்தத்தை அங்கீகரித்துள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் விதி எண்.146/பிரிவு 2–இன்படி உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதிய விதி 4A–வின்படி- “பல்வேறு பதவிகளுக்கான நேரடி நியமனங்களுக்கு எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுகிறது. அவ்வப்போது ஒன்றிய அரசு வெளியிடும் அறிவிப்புகள், அறிக்கைகள், அரசாணைகள் மட்டும் விதிமுறைகளுக்கு ஏற்றபடி இது பின்பற்றப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பற்றிய விவரங்கள், இன்ன பிற திருத்தங்கள், நிபந்தனைகள் போன்றவற்றை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவ்வப்போது அறிவிக்கும்போது அவற்றுக்கேற்ப மேற்கண்ட ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும். பணி நியமனங்களின்போது மேற்கண்ட பிரிவினர் அனைவரும் ஒதுக்கீடு பெறுவது உறுதி செய்யப்படுகிறது.”
இவ்வாறு திருத்தப்பட்ட விதி எண்.4A–வில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது. நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டு, நன்றி!
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி, மாற்றுத் திறனாளிகள் என அனைத்து பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளித்திடும் ஆணையை பிறப்பித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் பி.ஆர்.கவாய்க்கு, நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், நன்றியையும் உரித்தாக்குகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Dravida Kazhagam leader K Veeramani expresses gratitude for providing reservation in Supreme Court appointments to backward classes