தேர்தல் சூழலில் அதிரடி மாற்றங்கள்...! உயரதிகாரிகள் இடமாற்றம்...! - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புதிய பொறுப்பாளர் நியமனம்!
Dramatic changes election environment Senior officials transferred New head appointed Anti Corruption Department
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், சில அரசு அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர் என அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையாக தமிழகத்தின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி., சென்னை காவல்துறை கமிஷனர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் திடீர் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பதவி காலியாக இருந்த சூழலில், அந்தப் பொறுப்பை தற்காலிகமாக கவனிக்க புதிய அதிகாரியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பதவிக்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் தலையீட்டின் பேரில் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவி காலியாக இருந்து வந்தது.
இந்த சூழலில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் ஏப்ரல் 11, 2026 அன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் ஐ.ஜி. (SIC-I) ஆக பணியாற்றி வரும் ஏ.டி. துரை குமார் ஐபிஎஸ், இயக்குநர் பொறுப்பை கூடுதலாக ஏற்கிறார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், புதிய நிரந்தர அதிகாரி நியமிக்கப்படும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரையிலும், ஐ.ஜி. துரை குமார் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பை முழுமையாக மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Dramatic changes election environment Senior officials transferred New head appointed Anti Corruption Department