மருத்துவர் இராமதாஸின் சித்திரை திருநாள் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


நாளை சித்திரை திருநாளை முன்னிட்டு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவரின் அந்த வாழ்த்துச் செய்தியில்,

"சித்திரை பிறக்கட்டும்... சிரமங்கள் மறையட்டும்...
தமிழர் வாழ்வில் வெற்றி, மகிழ்ச்சி நிறையட்டும்!

தமிழர்கள் வாழ்வில் வெற்றிகளை நிறைக்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும்  என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். 

சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.

சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான்.  கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சித்திரைத் திருநாளை பொதுமக்கள் ஒன்று கூடி உற்சாகத்துடன் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. இப்போது கொரோனா விலகி விட்டதால் தமிழர்கள் வாழ்வில் இனி கொண்டாட்டங்களும், மகிழ்ச்சியும் நிறையும் என்பதில் ஐயமில்லை.

சூரிய கிரகணத்தையும், சந்திர கிரகணத்தையும் போன்றே, சில சதிகளால் சமூகநீதி கிரகணமும் அவ்வப்போது ஏற்படுகிறது. கிரகணம் என்பதே தேவையற்ற மறைப்பு தானே... தற்காலிக மறைப்பு தானே. அதுவும் விரைவில் விலகும். அதன் பின்னர் தமிழர் வாழ்வில் சமூகநீதியும், அதனால் கிடைக்கும் சமத்துவமும் செழிக்கும்.

அதைப்போலவே, உலகுக்கு உணவு படைக்கும் உழவர்களை மகிழ்விக்கும் வகையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் மேட்டூர் அணை குறித்த காலத்தில் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது; நீர் நிலைகளும் நிரம்பியிருப்பதால் உழவும் சிறக்கும். 

இவை மட்டுமின்றி, தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நலமும், வளமும்  கிடைக்க வேண்டும். அனைத்து மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இச்சித்திரைத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்"

இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் தந்து சித்திரை திருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Wish Chithirai Day 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->