செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மூடக் கூடாது., மத்திய அரசுக்கு மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மூடக் கூடாது என்று, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழாராய்ச்சிக்காக தொடங்கப்பட்ட செம்மொழி தமிழாராய்ச்சி மத்திய நிறுவனத்தை மைசூரை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்படும் பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்ற மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மூடும் முயற்சி கண்டிக்கத்தக்கவை.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மூட மத்திய அரசு பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதை எதிர்த்து பாமக தான் முதன்முதலில் குரல் கொடுத்தது. அதைத் தொடர்ந்து, அத்தகைய திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

அத்துடன் இச்சிக்கல் முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், புதிய கல்விக் கொள்கையில், "சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்; அதே நேரத்தில், பல்கலைக்கழகத்திற்குள்ளாக அவை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதே மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த முடிவை கைவிட வேண்டும்; செம்மொழி நிறுவனத்தை தனி மத்திய பல்கலைக்கழகமாக்க வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், இப்போது மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை தனி மத்திய பல்கலைக்கழகமாக்கி, அந்த பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இம்முடிவு பிற்போக்கானது; ஏற்றுகொள்ள முடியாது.

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை எந்த இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்துடன் இணைக்க மத்திய  அரசு நினைக்கிறதோ, அந்த அமைப்பின் ஓர் அங்கமாகத் தான் செம்மொழி தமிழ் உயர் ஆய்வு நிறுவனமாக செயல்பட்டு வந்தது. தமிழுக்கு தனி அடையாளம் வேண்டும் என்று  2004-09 ஐக்கிய முற்போக்கு ஆட்சிக் காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் வலியுறுத்தியதன் பயனாகவே செம்மொழி தமிழ் உயர் ஆய்வு நிறுவனம் இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்திலிருந்து பிரிக்கப்பட்டு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமாக 2008 மே 19-ஆம் தேதி முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. அதற்காக மிகப்பெரிய அளவில் தலைமை அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும், மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனமும் ஒன்றுக்கொன்று இணையான அமைப்புகளாகும்.  அவ்வாறு இருக்கும் போது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தரத்தை குறைத்து, அது ஏற்கனவே செயல்பட்டு வந்த நிறுவனத்துடன் இணைப்பது  செம்மொழி நிறுவனத்தை 12 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லும் செயலாகும். தமிழுக்கு இத்தகைய பின்னடைவை அனுமதிக்க முடியாது.

தமிழ் உலகின் மூத்த மொழி. அது குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் விசாலமானவை.  அவ்வாறு இருக்கும் போது தமிழாய்வுக்காக தொடங்கப்பட்ட நிறுவனத்தை, இன்னொரு நிறுவனத்துடன் இணைத்து பத்தோடு பதினொன்றாக மாற்றுவது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். எனவே, இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை தனி மத்திய பல்கலைக்கழகமாக்கி, அந்த பல்கலைக் கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். அதற்கு மாறாக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தனி மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று, அந்த அறிக்கையில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss statement dec 4


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->